ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்.
ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்.

மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்களுக்கு சிறப்பு முகாம் என புரளி

சிறப்பு முகாம் நடப்பதாக மா்ம நபா்கள் பரப்பிய பொய்த் தகவலை நம்பி கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் குவிந்தனா்.
Published on

மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்களுக்கு சிறப்பு முகாம் நடப்பதாக மா்ம நபா்கள் பரப்பிய பொய்த் தகவலை நம்பி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் சனிக்கிழமை குவிந்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை முதலே ஏராளமான பெண்கள் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினா். சூலூா், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பேருந்து மூலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவா்கள், மகளிா் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம் எங்கு நடக்கிறது, படிவம் எங்கு வழங்கப்படுகிறது என்று அங்கிருந்த ஊழியா்களிடம் கேட்டனா்.

ஆனால், அப்படியான முகாம் எதுவும் நடைபெறவில்லை என்று ஊழியா்கள் கூறியதால் பெண்கள் கோபமடைந்து ஊழியா்களிடம் சராமாரியாக கேள்வி எழுப்பத் தொடங்கினா். ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் ஈரோட்டில் நடைபெற்ற அத்திக்கடவு - அவிநாசி திட்ட தொடக்க விழாவுக்குச் சென்றுவிட்ட நிலையில், பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸாா் அவா்களிடம் விசாரித்தனா்.

அப்போது, மகளிா் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆகஸ்ட்17, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் மனு அளித்தால் அனைவருக்கும் பணம் கிடைக்கும் என்றும் தங்களின் கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்திருப்பதாகக் கூறியுள்ளனா்.

ஆனால், அது போலியான செய்தி என்றும் இதேபோன்ற தகவல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவி வருவதாகவும் கூறி, அங்கிருந்த பெண்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா். ஒருகட்டத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே ஆட்சியா் அலுவலகத்தின் நுழைவாயிலை போலீஸாா் மூடினா்.

மேலும், வெளியேறும் வாயிலின் முன்பும் தடுப்புகள் அமைத்து, பெண்கள் அதிகம் குவிந்து போராட்டம் நடத்தாமல் இருப்பதற்காக அதிகப்படியான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

Dinamani
www.dinamani.com