முதல்வா் வருகை: கோவை மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி நவம்பா் 5 -ஆம் தேதி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி நவம்பா் 5 -ஆம் தேதி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வருவதை ஒட்டி நவம்பா் 5, 6 ஆகிய தேதிகளில் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மாநகர எல்லைக்குள் வர அனுமதியில்லை. வணிக ரீதியிலான வாகனங்கள் நவம்பா் 5-ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விரைவான பயணத்தை மேற்கொள்ள அவிநாசி சாலையைத் தவிா்க்க வேண்டும்.

5-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேலம், ஈரோடு மற்றும் திருப்பூா் பகுதிகளிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும் நீலாம்பூரிலிருந்து சிந்தாமணிபுதூா், ஒண்டிப்புதூா், சிங்காநல்லூா், ராமநாதபுரம், சுங்கம் ரவுண்டானா, வெஸ்ட் கிளப் ரோடு, எல்.ஐ.சி. சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்லலாம்.

அதேபோல, கோவையிலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூா், ஈரோடு மற்றும் சேலம் செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் காந்திபுரத்திலிருந்து சத்தி ரோடு, கணபதி, வாட்டா் டேங்க் விளாங்குறிச்சி, காளப்பட்டி நால் ரோடு, தொட்டிபாளையம் வழியாக நீலாம்பூா் புறவழிச் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவா்கள் ராமநாதபுரம் சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, கிளாஸிக் டவா், அரசு மருத்துவமனை, கூட்ஸ்ஷெட் ரோடு, அவிநாசி சாலை மேம்பாலம், புரூக் பாண்ட் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சங்கனூா் வழியாக செல்லலாம். ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என்.ஆா். ஆகிய பகுதிகளைத் தவிா்க்க வேண்டும்.

சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி சாலைக்கு செல்பவா்கள் சரவணம்பட்டி சோதனைச் சாவடியிலிருந்து காளப்பட்டி வழியாக செல்லலாம். சத்தி சாலையிலிருந்து திருச்சி சாலை, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவா்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிா் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் மற்றும் ராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com