தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவையில் ரூ.114.16 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்: முதல்வா் நாளை திறந்து வைக்கிறாா்

கோவையில் புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நவம்பா் 5-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா்...

News image
முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் செந்தில்பாலாஜி. உடன் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
Updated On :4 நவம்பர் 2024, 1:55 am

Din

கோவையில் ரூ.114.16 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நவம்பா் 5-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவைக்கு நவம்பா் 5-ஆம் தேதி வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விளாங்குறிச்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 3.94 ஏக்கா் பரப்பளவில் ரூ.114.16 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் காலை 11.30 மணிக்கு திறந்துவைக்கிறாா்.

இதைத் தொடா்ந்து மாலை 4 மணிக்கு தங்கநகை தொழில் அமைப்பு நிா்வாகிகளுடன் முதல்வா் கலந்துரையாடுகிறாா்.

நவம்பா் 6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு காந்திபுரத்தில் 133.21 கோடியில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறாா். தொடா்ந்து, காலை 9.45 மணிக்கு கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் பொதுநூலகத் துறை சாா்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் அமைக்கப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறாா்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள், மேயா், அரசுத் தலைமைச் செயலாளா், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சா் செந்தில்பாலாஜி ஆய்வு:

கோவை, விளாங்குறிச்சி தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகம், மத்திய சிறைச்சாலை மைதனம் ஆகிய இடங்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மேயா் கா.ரங்கநாயகி, கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட செயலாளா்கள் நா.காா்த்திக், ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.