மாநகராட்சிப் பகுதிகளில் 1 லட்சம் பனை விதைகள் நட இலக்கு: ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்

நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
Published on

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்றோரங்கள், குளங்கள், வாய்க்கால், குட்டைகளின் கரைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாநகராட்சியில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவும், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவுசெய்யவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி எல்லைக்குள் நொய்யலாற்றின் நீளம் 16.55 கி.மீ. இருகரையின் நீளம் 33.10 கி.மீ. ஆகும். இதில், 20 கி.மீ. கரைப் பகுதிகளில் புதா் செடிகள் அழிக்கப்பட்டுள்ளன. சுத்தம் செய்யப்பட்ட பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், மத்திய மண்டலத்தில் 660, கிழக்கு மண்டலத்தில் 1,450, வடக்கு மண்டலத்தில் 500, மேற்கு மண்டலத்தில் 1,100, தெற்கு மண்டலத்தில் 4,600 என மொத்தம் 8,310 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளிலும் இப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.