மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தொழிலாளிக்கு கோவை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கோவை அருகே கிணத்துக்கடவுப் பகுதியைச் சேர்ந்தவர் சக்திதாஸ் (39). இவர் கூலி வேலை செய்து வந்தார். ஏற்கெனவே திருமணமான இவருக்கு செல்வபுரத்தைச் சேர்ந்த கதீஜா (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தனது கணவர் இறந்துவிட்டதால் மகளுடன் கதீஜா தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வந்த சக்திதாஸ், கதீஜாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். மேலும் அவர் வேலைக்குச் செல்லாமல், மது அருந்திவிட்டு கதீஜாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். அவரது மகளின் வாழ்வையும் கெடுத்து விடுவதாக மிரட்டியுள்ளாராம். இதனால், கதீஜா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சக்திதாஸை அழைத்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சக்திதாஸ் 2014 டிசம்பர் 12-ஆம் தேதி மதுஅருந்திவிட்டு கதீஜாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரைக் கத்தியால் குத்தினார். காயமடைந்த கதீஜாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செல்வபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சக்திதாஸைக் கைது செய்தனர்.
இந்த வழக்கானது கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி மலர்மன்னன் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
இதில், சக்திதாஸுக்கு கொலை முயற்சிக்காக 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் பிரிவின் கீழ் 6 மாதங்கள் சிறை, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








