

தீபாவளியையொட்டி கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுபவர்களை பிடிக்க காவல்துறையினர் உயர் கோபுர மேடை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து புதுத் துணிகள், பொருட்கள் வாங்க என கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட கடைவீதி பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இதனால் கோவையில் உள்ள கடைத்தெருக்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்த நிலையில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் விதிமுறைகள் கடைபிடிப்பு உள்ளிட்டவை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர வருவாய்த்துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா விதி முறைகளை கடைபிடிக்க வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. அதையும் மீறி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் குற்ற சம்பவங்கள் மற்றும் திருடர்களை உயர் கோபுரம் அமைத்து அதன் மூலம் கண்காணிக்க கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை ஆணையர் ஸ்டாலின் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் என 50 பேர் காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடைவீதியில் பல்வேறு பகுதிகளில் உயர் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து துணை ஆணையர் ஸ்டாலின் கூறும்போது, பிக்பாக்கெட் திருடர்கள், ஜேப்படி திருடர்கள் பிடிக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை புறக்காவல் நிலையங்கள் உள்ள திரை மூலம் காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இனிவரும் நாட்களில் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதுதவிர கூட்டம் அதிகரிக்கும் சமயங்களில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க சிறையிலிருந்து வெளியே வந்த பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகின்றன.
சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்படும் ரௌகள் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.