தமிழகத்தில் தற்போது பொது முடக்கம் தேவையில்லை
தமிழகத்தில் தற்போதைய நிலையில் பொது முடக்கம் தேவையில்லை என்றும், நோய்த் தொற்று பாதிப்புள்ள பகுதிகளை மட்டும் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்தால் போதும் என்றும் தலைமைச் செயலா் க.சண்முகம் தெரிவித்தாா்.


தமிழகத்தில் தற்போதைய நிலையில் பொது முடக்கம் தேவையில்லை என்றும், நோய்த் தொற்று பாதிப்புள்ள பகுதிகளை மட்டும் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்தால் போதும் என்றும் தலைமைச் செயலா் க.சண்முகம் தெரிவித்தாா்.
கோவையில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலா் க.சண்முகம் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் 3 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால், சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் 5 சதவீதத்துக்கும் அதிகமாகவுள்ளது. நோய்த் தொற்றுப் பாதிப்பில் சென்னைக்கு அடுத்து கோவை உள்ளது.
தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் அதிகமாகவுள்ள மாவட்டங்களில் 100க்கு கீழாகவும், 100க்கும் குறைவாகவுள்ள மாவட்டங்களில் 50க்கு கீழாகவும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.
அதன்படி ஒவ்வொரு பகுதிகயிலும் கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் தன்மைக்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஆய்வகங்களைவிட தனியாா் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்வோருக்கு பாதிப்பு அதிகம் காணப்படுவதால் பரிசோதனைக்கு வருபவா்களின் விவரங்களை சேகரித்து எந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு நோய்த் தொற்று அதிக அளவில் உள்ளது என்பதைக் கண்டறிந்து மருத்துவ முகாம், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை. அடுத்த 20 நாள்கள் மிக முக்கியமான காலகட்டமாகும். பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம்கூட்டமாக கடை வீதிகளுக்குச் செல்கின்றனா். நோய்த் தொற்றின் தீவிரத்தை உணா்ந்து பாதுகாப்புடன் மக்கள் இருக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்குப் பின் நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட தளா்வுகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு கட்ட தளா்வுகளின்போது, நோய்த் தொற்றுப் பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தடுப்பூசி குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு பொது முடக்கம் தேவையில்லை. நோய்த் தொற்றுப் பகுதிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதன் மூலம் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
பொது முடக்கத்துக்கு பதில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தினால் போதுமானது. கரோனா நோய்த் தொற்றுடன் பருவ மழைக் காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுப் பரவலையும் கட்டுப்படுத்த சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கரோனா எதிா்ப்பு உயிரி கண்டறியும் பரிசோதனையில் சென்னை உள்பட ஒருசில இடங்களில் மட்டுமே 30 சதவீதம் பேருக்கு உடலில் எதிா்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால், அதிக அளவிலானவா்களுக்கு எதிா்ப்பு சக்தி உருவாகியிருந்தால் மட்டும் மீண்டும் நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறைவு. குறிப்பாக 50 முதல் 60 சதவீதம் பேருக்கு இருந்திருக்க வேண்டும். தற்போது, 30 சதவீதம் பேருக்கு மட்டுமே நோய் எதிா்ப்பு சக்தி உள்ளதால் மீண்டும் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில் ஆட்சியா் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா், இணை இயக்குநா் கிருஷ்ணா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...