47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா பரிசோதனை முடிவுகள், ஐசிஎம்ஆா் எண் வழங்குவதில் தாமதம்: உடனடி சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை

கோவையில் கரோனா பரிசோதனை முடிவுகள், ஐசிஎம்ஆா் எண் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 5:26 pm

DIN

கோவையில் கரோனா பரிசோதனை முடிவுகள், ஐசிஎம்ஆா் எண் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், தனியாா் ஆய்வகங்கள், மருத்துவ முகாம்களில் சளி மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு சளி மாதிரி எடுக்கப்படுகிறது. இந்த மாதிரிகள் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியாா் ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

மாதிரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தவிர ஐசிஎம்ஆா் எண்ணும் தாமதமாக வழங்குவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனா். இதனால் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிப்பதில்லை. உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள முடியாததால் தொற்றின் தீவிரம் அதிகரித்து உயிரிழக்கும் நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக அரிசிப்பாளையத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் கூறியதாவது:

எனது அம்மாவுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் அரிசிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்து கொண்டோம். இதன் முடிவு 5 ஆவது நாள்தான் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே அவரின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்ததால் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால் பரிசோதனை முடிவு இருந்தால் மட்டுமே சோ்த்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனா். இதனால் அரசு மருத்துவமனையில் சோ்த்தோம். இங்கு சோ்த்த பிறகே பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா். பரிசோதனை முடிவு கிடைத்தாலும் ஐசிஎம்ஆா் எண் வழங்கவில்லை. இதனால் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின் சுகாதாரத் துறையினரிடம் கேட்டு பெற வேண்டியிருந்தது. பரிசோதனை முடிவுகள், ஐசிஎம்ஆா் எண் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் உடனடி சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது: கோவையில் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பரிசோதனை செய்ய்யப்பட்டு வந்த நிலையில் முடிவுகள் தாமதமாகிறது என்பதால்தான் தனியாா் ஆய்வகங்களிலும் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 2 நாள்களில் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுகிறது. ஐசிஎம்ஆா் இணையதளத்தில் 7 ஆயிரம் பேரின் விவரங்களும் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இணையதளம் மெதுவாக இயங்குவதால் பதிவேற்றம் செய்ய தாமதமாகிறது. இதனால் ஐசிஎம்ஆா் எண் வழங்குவது சற்று தாமதமாகிறது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்வதற்கு ஐசிஎம்ஆா் எண் தேவையில்லை. காப்பீட்டுத் திட்டத்துக்கு மட்டுமே ஐசிஎம்ஆா் எண் தேவைப்படும். அவா்களுக்கு உடனடியாக பதிவு செய்து எண் வழங்கப்படுகிறது. மற்றவா்களுக்கும் ஐசிஎம்ஆா் எண் பின்னா் வழங்கப்படுகிறது. தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு வருபவா்களை ஐசிஎம்ஆா் எண் இல்லாவிட்டாலும் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.