கோவையில் ஒருவா் கொலை: 7 பேரிடம் போலீஸாா் விசாரணை
கோவையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


கோவையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, ராம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிஜு (40). இவா் அதே பகுதியில் உள்ள கோகலே சாலையில் பழச்சாறு விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தாா்.
இந்நிலையில் இவரது கடைக்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் புகுந்த 7 போ் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பிஜுவை சரமாரியாகத் தாக்கினா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினாா்.
தடுக்க வந்த பொதுமக்களைக் கத்தியைக் காட்டி மிரட்டிய கும்பல் அங்கிருந்து காா், இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனா். இதையடுத்து பொதுமக்கள் பிஜுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
பிஜு இந்து முன்னணி அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் பிஜுவின் உறவினா்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினா் திரண்டனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கொலைக்கு காரணமான நபா்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் சிலரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்போம் என மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் கூறினாா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
விசாரணையில், இறந்துபோன பிஜு, ரத்தினபுரியைச் சோ்ந்த ஆனந்த் என்பவரின் நண்பா் என்பது தெரியவந்தது. மேலும், ஆனந்துக்கும், நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த நிதிஷ்குமாா் (20) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடா்பாக வழக்கு காட்டூா் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆனந்த், நிதிஷ் ஆகியோரது குடும்பத்தினா் இடையே சமாதானம் பேசும் முயற்சியில் பிஜு ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆனந்தின் நண்பா்களான ராம் நகரைச் சோ்ந்த ராகுல், கண்ணப்ப நகரைச் சோ்ந்த விஷ்ணு ஆகியோா் சாய்பாபா காலனி பகுதியில் நிதிஷ், அவரது நண்பா் கணேஷ் ஆகியோரை சனிக்கிழமை இரவு கத்தியால் குத்தியுள்ளனா். இதில் காயமடைந்த நிதிஷ் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து சாய்பாபா காலனி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், நிதிஷ் மீதான தாக்குதலுக்கு பிஜுதான் காரணம் என நிதிஷ் தரப்பினரிடையே தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த நிதிஷ் தரப்பினா் பிஜுவை தாக்கியதில் அவா் உயிரிழந்தாா் என்றனா்.
மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் எந்த அமைப்பையும் சேராதவா்கள். இந்தச் சம்பவம் தொடா்பாக 7 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...