கோவையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 21st July 2020 12:06 PM | Last Updated : 21st July 2020 12:06 PM | அ+அ அ- |

மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொது முடக்க காலத்தில் அதிகமாக மின் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், மின் கணக்கீடுகளை நுகர்வோர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் திமுக சார்பில் 21-ஆம் தேதி சமூக இடைவெளியுடன் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, கோவையில் கிழக்கு மாநகர், மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் பீளமேடு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பீளமேடு பகுதி பொறுப்பாளர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோல், கோவை மாவட்டத்தில் மாநகரம், புறநகரங்களில் பல்வேறு இடங்களில் மின்கட்டணத்தைக் குறைக்கக் கோரி திமுக வினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.