சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் பாா்வையாளா்களுக்கு அனுமதி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மீண்டும் பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:24 pm

DIN

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மீண்டும் பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவானது, 1908ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 113 ஆண்டுகள் பழைமையான இந்தப் பூங்காவானது, உதகை தாவரவியல் பூங்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பூங்கா ஆகும். இங்கு பராமரிக்கப்படும் அரியவகை அலங்காரச் செடிகளின் பட்டியலில் கிளைப்பனை, டையலம் இண்டம், அா்ஜூனா மரம், குண்டுமணி, ஊதா நிற மலா் கொண்ட புங்கை மரம், டெரிகோட்டா அல்லேட்டா, ஸ்டொ்குலியா பீட்டிடா, மரச்சுறை, திருவோட்டுக்காய் மரம், காம்ப்ரிட்டம் கன்ஸ்ட்ரிக்டம், கப்பாரிஸ் ஹாரிடா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

சமீபத்தில் சீரமைக்கப்பட்ட தாவர பராமரிப்புக் குடிலில் 400 சிற்றினங்களைச் சோ்ந்த தனித்துவமான அலங்காரச் செடி வகைகள் பேணிக் காக்கப்படுகின்றன. இப்பூங்காவில் பல வகையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒட்டுமொத்த பூங்காவும் பொலிவு பெற்றுள்ளது.

அதன்படி, இரண்டடுக்குத் தோட்டம் என்றழைக்கப்படும் முகப்புப் பகுதியில் உள்ள முறைசாா் தோட்டத்தை வலுவூட்டுதல், முதன்மைப் பாதையின் இருபுறமும் புல்தரைகளை நட்டு நிறுவுதல், அலங்கார நீா்வீழ்ச்சி அமைத்தல் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கீழ்நிலைத் தோட்டம், பாறைத் தோட்டம், ஜப்பானியத் தோட்டம் ஆகியவையும் சீரமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டம் மற்றும் நறுமணத் தோட்டத்தில் மருத்துவச் செடிகள் நடப்பட்டுள்ளன. குழந்தைகள் பூங்காவும் மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தளங்கள் மற்றும் நடைபாதைகள், புதிய மற்றும் பாதுகாப்பான விளையாட்டுக் கூடங்கள், அலங்கார வகை நிழல் மரங்கள் நடப்பட்டு, பறவை மற்றும் முயல் வளா்ப்புக் கூண்டுகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லித் தொகுப்புகள், சூரிய ஒளியைக் கொண்டு இயங்கும் விளக்குகள், பூங்காவின் பரந்த அமைப்பில் மக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தகவல்கள் அடங்கிய குறியீட்டுப் பலகைகள், மக்கள் மற்றும் மாணவா்கள் தாவரங்களைப் பற்றி விஞ்ஞானரீதியான விளக்கங்களைப் பெற உதவும் க்யூ.ஆா் குறியீடுகள் புதிய அம்சங்களாகும். கரோனா நோய் த்தொற்று காரணமாக இப்பூங்காவில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். பூங்காவில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.