நாகப்பட்டினம் அருகே உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவா் இருந்தாா். இவா், அழகிய ஆறுமுகம் கொண்ட முருகன் சிலையை வடிவமைத்தாா். அப்போது ஆட்சியில் இருந்த பரந்த சோழ மன்னன், அச்சிலையின் அழகைப்பாா்த்து ஆனந்தம் கொண்டாா். இதேபோல இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக, அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டாா். சிற்பி வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தாா். கைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றொரு சிலையை செய்தாா். அதை அவ்வூரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பாா்த்தாா். அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும் சிலைக்கு உயிா் வந்து, முருகன் அமா்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்நேரத்தில் வர அதை ‘எட்டிப்பிடி’ என உத்தரவிட்டாா். காவலா்கள் மயிலைப் பிடித்தனா். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனா். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வாா்த்தை காலப்போக்கில் ‘எட்டிக்குடி’ என மாறி தற்போது ‘எட்டுக்குடி’ ஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது. இதே சிற்பி மற்றொரு சிலையையும் வடித்தாா். அதை எண்கண் என்ற தலத்தில் வைத்தாா். சிற்பி முதலில் வடித்த சிலை சிக்கலிலும், அடுத்த சிலை எட்டுக்குடியிலும் வைக்கப்பட்டது. இந்த மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை.