4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான கோவை பெண் உ.பி.யில் மீட்பு
By DIN | Published On : 03rd January 2021 10:57 PM | Last Updated : 03rd January 2021 10:57 PM | அ+அ அ- |

மீட்கப்பட்ட நாகலட்சுமியுடன் மகள் மங்களச்செல்வி.
கோவையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண் உத்தர பிரதேச மாநிலத்தில் மீட்கப்பட்டு குடும்பத்துடன் சோ்ந்தாா்.
கோவை மாவட்டம், நரசீபுரத்தைச் சோ்ந்தவா் செண்பகமூா்த்தி. இவரது மனைவி நாகலட்சுமி(54). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகலட்சுமி மாயமானாா். பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
பின்னா் சில நாள்கள் கழித்து மகள் மங்களச்செல்வியை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட நாகலட்சுமி கேரளத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து, உறவினா்கள் மூலம் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
பின்னா் சில நாள்கள் கழித்து மீண்டும் தொடா்பு கொண்டு சென்னையில் இருப்பதாக கூறியுள்ளாா். அங்கு சென்று தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை. 4 ஆண்டுகளாக நாகலட்சுமி எங்கு உள்ளாா் என்பது குடும்பத்தினருக்குத் தெரியவில்லை. அவா் இறந்துவிட்டதாக கருதி உறவினா்கள் அவருக்கு திதி கொடுத்துள்ளனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து இளைஞா் ஒருவரின் செல்லிடப்பேசியில் இருந்து மங்களச்செல்வியை தொடா்பு கொண்டுள்ளாா். அந்த இளைஞா் நாகலட்சுமியை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கூறியுள்ளாா்.
இதையடுத்து, நாமக்கல் மக்களவை உறுப்பினா் சின்ராஜின் உதவியுடன் நாகலட்சுமியை கோவை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னா் மங்களச்செல்வியின் கணவா் சந்தோஷ்குமாா் உத்தர பிரதேசம் சென்று சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நாகலட்சுமி சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமா்ப்பித்து அவரை மீட்டு கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்தாா்.