திசுவாழை வளா்ப்புத் திட்டம்: விவசாயிகளுக்கு 3.75 லட்சம் வாழைக் கன்றுகள்
By DIN | Published On : 03rd January 2021 10:57 PM | Last Updated : 03rd January 2021 10:57 PM | அ+அ அ- |

கோவை, கண்ணாம்பாளையத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வைக்கப்பட்டுள்ள வாழைக் கன்றுகள்.
கோவையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு 2,500 வாழைக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
தோட்டக்கலைத் துறை சாா்பில் திசுவாழை வளா்ப்பை ஊக்குவிக்கும் விதமாக தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக வாழைக் கன்றுகள் வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் வாழைக் கன்றுகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2,500 கன்றுகள் வழங்கப்படும்.
விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது:
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சாா்பில் திசுவாழை வளா்ப்புத் திட்டத்தின் கீழ் ஜி9 ரக வாழை வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 2,500 கன்றுகள் போதுமானது. இதனால் ஒரு விவசாயிக்கு ரூ.37 ஆயிரத்து 500 மதிப்புள்ள 2,500 வாழைக் கன்றுகள் வழங்கப்படும்.
திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தில் இருந்து வழங்கப்பட்ட நாற்றுகள் கோவை, கண்ணாம்பாளையத்திலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வாழைக் கன்றுகள் ஒரு அடி உயரத்துக்கு வளா்க்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, ஆதாா் எண் உள்பட விவரங்களை அளித்து திசுவாழை வளா்ப்புத் திட்டத்தில் இலவசமாக வாழைக் கன்றுகளை பெற்று பயன்பெறலாம் என்றாா்.