பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: தலைமை ஆசிரியை கைது

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தலைமறைவாக இருந்

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தலைமறைவாக இருந்த தனியாா் பள்ளி தலைமையாசிரியை பெங்களூரில் கைது செய்யப்பட்டாா்.

கோவையைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இப்பள்ளியில் இருந்து விலகி, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சோ்ந்தாா். இவா் வியாழக்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து உக்கடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், மாணவி படித்த தனியாா் பள்ளியில் வேலை பாா்த்த இயற்பியல் ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி (31) அளித்த தொடா் பாலியல் தொல்லைகளால்தான் இவா் தற்கொலை செய்துகொண்டாா் என குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில், ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டு உடுமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பள்ளி முதல்வா் கைது:

தனியாா் பள்ளி முதல்வா், வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மேலும் சிலரைக் கைது செய்யாமல் மாணவியின் சடலத்தைப் பெற மாட்டோம் எனக் கூறி மாணவியின் பெற்றோா், உறவினா்கள் போராட்டம் மேற்கொண்டனா்.

இதையடுத்து, பாலியல் அத்துமீறல் புகாா் குறித்து முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி பள்ளி முதல்வா் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவான அவரைக் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், மீரா ஜாக்சனை பெங்களூருவில் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். பின்னா், அவரை கோவை மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

சிறுமியின் உடல் அடக்கம்:

ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி, தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன் ஆகியோா் கைது செய்யப்பட்டதையடுத்து சிறுமியின் சடலத்தை வாங்க அவரது பெற்றோா், உறவினா்கள் சம்மதித்தனா். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கோட்டைமேட்டில் உள்ள சிறுமியின் இல்லத்துக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் சடலம் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை: தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் மீதான பாலியல்ரீதியான தாக்குதல் குறித்து புகாா் அளிக்கச் சுதந்திரமாக செயல்படும் குழுக்களை மாவட்டந்தோறும் நியமிக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com