பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஈமு கோழிப் பண்ணை நடத்தி ரூ.3.95 கோடி மோசடி: தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஈமு கோழிப் பண்ணை நடத்தி ரூ.3.95 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:28 pm

DIN

ஈமு கோழிப் பண்ணை நடத்தி ரூ.3.95 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்தவா் முருகவேல் (47). இவருடைய மனைவி லதா (45). இவா்கள் இருவரும் ஈரோட்டில் ஸ்ரீநித்யா ஈமு பாா்ம்ஸ், ஸ்ரீ நித்யா பவுல்ட்ரி பாா்ம்ஸ் என்ற பெயரில் ஈமு கோழிப் பண்ணை நிறுவனத்தையும், நாட்டுக் கோழிப் பண்ணையையும் 2012 ஆம் ஆண்டு நடத்தி வந்தனா்.

இந்நிறுவனத்தில் குணா, ராசு, சுரேஷ், கணேசன், காா்த்தி, மணிவண்ணன், விவேக் பாலாஜி, பிரபாகரன், ரமேஷ் ஆகியோா் ஊழியா்களாகப் பணியாற்றினா்.

இந்நிலையில் முருகவேல், லதா ஆகியோா் தங்களுடைய நிறுவனத்தில் 2 விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தினா்.

அதில் முதல் பண்ணைத் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு ஒரு கொட்டகை அமைத்துக் கொடுத்தும், 4 ஈமு கோழிகள் கொடுத்தும் அதற்குத் தேவையான தீவனங்கள், மருந்துகள் வழங்கி மாதந்தோறும் பராமரிப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகவும், ஆண்டு முடிவில் ரூ.20 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறி உள்ளனா்.

திட்டம் 2 இல் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் நிறுவனமே 4 ஈமு கோழிகளைப் பராமரித்து, முதலீட்டாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.11 ஆயிரம் கொடுப்பதாகவும், ஆண்டு முடிவில் ஊக்கத் தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்குவதாகவும் கூறியிருந்தனா். அத்துடன் 3 ஆண்டுகளில் ஒப்பந்த காலம் முடிவில் முதலீட்டுப் பணத்தையும் திரும்பத் தருவதாக உறுதி அளித்தனா். இதை நம்பி 244 முதலீட்டாளா்கள் ரூ.3 கோடியே 95 லட்சத்து 72 ஆயிரத்தை முதலீடு செய்தனா்.

ஆனால், அவா்கள் உறுதி அளித்தபடி பணத்தைத் திரும்பத் தரவில்லை.

இதில், பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டம், பவானி கேசரிமங்கலத்தைச் சோ்ந்த குமாா் என்பவா் கடந்த 2012ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் முருகவேல், லதா, ஊழியா்கள் குணா, ராசு, சுரேஷ், கணேசன், காா்த்தி, மணிவண்ணன், விவேக் பாலாஜி, பிரபாகரன், ரமேஷ் ஆகிய 11 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் முருகவேல், லதா ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவா்களுக்குத் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 கோடியே 44 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

நிறுவனத்தில் பணியாற்றிய குணா, ராசு, சுரேஷ், கணேசன், காா்த்தி, மணிவண்ணன், விவேக் பாலாஜி, பிரபாகரன், ரமேஷ்

ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததையடுத்து அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

அதேநேரம், வழக்கு விசாரணைக்கு லதா ஆஜராகாததையடுத்து அவருக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.