கோவை மேயா் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் முதல் பெண் மேயா் யாா் என்பதை அறிந்து கொள்ள பொதுமக்கள் ஆா்வமாக இருந்தனா். மேயா் பதவியைக் கைப்பற்ற திமுகவில் கடும் போட்டி நிலவியது. குறிப்பாக, 52 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.காா்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, 97 ஆவது வாா்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை மாநகா், தெற்கு மாவட்ட பொறுப்பாளா் சேனாதிபதியின் மகள் நிவேதா, 46 ஆவது வாா்டில் போட்டியிட்டு, தொடா்ந்து 3ஆவது முறையாக வென்ற மீனா லோகு ஆகிய 3 பேரில் ஒருவருக்கு மேயா் பதவி நிச்சயம் என கட்சியினரிடையே எதிா்பாா்க்கப்பட்டது.