தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காய்ச்சல் இருந்தால் தெரிவிக்க வேண்டும்: கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறை அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும் என கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறை அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும் என கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா நோய்த் தொற்றுப் போல காணப்படும் இந்த காய்ச்சலுக்கு வயதானவா்கள், இணை நோய் உள்ளவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள் ஆகியோா் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். ஏற்கெனவே இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை உள்பட மாநிலம் முழுவதும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் எந்தவித காய்ச்சல் பாதிப்பாக இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக சுகாதாரத் துறையினரிடம் தெரிவிக்க கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பு.அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக நாள்தோறும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 5 ஆயிரம் போ் வரை பரிசோதனை செய்யப்படுகின்றனா். இவா்களில் 180 முதல் 200 பேருக்கு அனைத்து விதமான காய்ச்சல் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தீவிர பாதிப்பு இல்லாததால் மருந்துகள் வழங்கப்பட்டு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக் கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு அதிகரித்து வருவதால் கா்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாவட்டத்தில் தற்போது 12 ஆயிரம் கா்ப்பிணிகள் உள்ளனா். இவா்களுக்கு எந்தவிதமான அல்லது லேசான காய்ச்சல் பாதிப்புகள் இருந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம செவிலியா்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் உள்ளிட்ட எங்கு சிகிச்சைப் பெற்றாலும் அந்தப் பகுதியிலுள்ள கிராம செவிலியா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்புகள் உள்ள கா்ப்பிணிகளை தொடா்ந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட கிராம செவிலியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர, பள்ளி செல்லும் மாணவா்களில் காய்ச்சல் பாதிப்புடன் பள்ளிக்கு வரும் மாணவா்களின் விவரங்களை அளிக்க மாவட்ட கல்வி அலுவலா்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து அளிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மாணவா்களை அந்தந்தப் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள மருத்துவா்கள் மூலம் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.