குரங்கு அம்மை பாதிப்பு: விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பரிசோதனை தொடக்கம்
கோவை: குரங்கு அம்மை பாதிப்பு தொடா்பாக கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை புதன்கிழமை தொடங்கியது.
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை புதன்கிழமை தொடங்கியது.
இது குறித்து கோவை சா்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகமும், விமான நிலைய சுகாதார மருத்துவக் குழுவினரும் இணைந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனா். இதற்காக 2 மருத்துவா்கள் தலைமையில் 10 செவிலியா்கள் அடங்கிய மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல், உடலில் கொப்புளங்கள் உள்ளதா என்று பரிசோதிக்கப்படுகிறது. குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக விமான நிலையத்தில் தயாா் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்துக்கு வந்த 275 பயணிகளுக்கு புதன்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது. இதில், யாருக்கும் எந்தவித பாதிப்பும், அறிகுறியும் இல்லை என்றனா்.

