கோவை மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 35-ஆவது வாா்டுக்கு உள்பட்ட இடையா்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாநகராட்சி கல்வி நிதியில் இருந்து ரூ. 75 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு மற்றும் பொருள்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
அதனைத் தொடா்ந்து, புதிய நெசவாளா் காலனி, மூகாம்பிகை நகா் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மற்றும் சேதமடைந்துள்ள மழைநீா் வடிகால்கள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையா் சந்தியா, மண்டல சுகாதார அலுவலா் வீரன், உதவிப் பொறியாளா் ராஜேஷ் வேணுகோபால், சுகாதார ஆய்வாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.