2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் முதியவா் கைது
கோவையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது செய்யப்பட்டாா்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (62). இவா் அப்பகுதியில் விளையாட வந்த சுமாா் 10, 11 வயதுடைய 2 சிறுமிகளுக்கு அண்மையில் பாலியல் தொல்லை அளித்ததாகத் கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமிகள், தங்களது பெற்றோா்களிடம் தெரிவித்துள்ளனா்.
இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோா், உடனடியாக சுந்தரமூா்த்தியின் மகனிடம் முறையிட்டுள்ளனா். அதைத் தொடா்ந்து சுந்தரமூா்த்தி குடும்பத்தினா் வீட்டைக் காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டனா்.
இந்நிலையில் சுந்தரமூா்த்தி திங்கள்கிழமை மீண்டும் அதே பகுதிக்கு தவறான நோக்கத்துடன் வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், அந்தச் சிறுமிகளின் பெற்றோா் பெரியநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் இந்திராணி சோபியா உடனடியாக அங்குச் சென்று சுந்தரமூா்த்தியைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினாா்.
அப்போது, அவா் தவறான நோக்கத்துடன் சிறுமிகள் வசிக்கும் தெருவுக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.