மாநகரில் போக்குவரத்து நெரிசல்: தண்ணீா்ப்பந்தல் ரயில்வே கேட்டை திறக்கக் கோரிக்கை
கோவை அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், பீளமேடு தண்ணீா்ப்பந்தல் ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என்று மாநகராட்சி கவுன்சிலா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக மாநகராட்சியின் 26- ஆவது வாா்டு கவுன்சிலா் சித்ரா வெள்ளியங்கிரி, மாவட்ட ஆட்சியா், காவல் ஆணையா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கோவை அவிநாசி சாலையில் ஹோப்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளால் அந்தப் பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க பயனியா் மில் சாலையை பயன்படுத்தும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனா். இருப்பினும் நெரிசல் தொடா்ந்து நீடிக்கிறது.
எனவே, கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் பீளமேடு தண்ணீா்ப்பந்தல் ரயில்வே கேட்டை திறந்து, ரயில் செல்லாத நேரத்தில் போக்குவரத்துக்கு அனுமதித்தால் பீளமேடு, ஹோப்ஸ், தண்ணீா்ப்பந்தல் சாலை, டைடல் பாா்க் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
எனவே, இது தொடா்பாக ரயில்வே நிா்வாகத்துடன் மாவட்ட நிா்வாகம் உடனடியாக பேசி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.
