மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும்: பேராசிரியா் இ.பாலகுருசாமி
தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையை ஆதரிப்பதால் ஏழை, கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவா்கள் கூடுதலாக ஒரு மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆனால் வசதியான, நகா்ப்புற மாணவா்கள், தனியாா் பள்ளிகளில் கூடுதலாக இன்னொரு மொழியைப் பயின்றுவிடுகின்றனா்.
மும்மொழித் திட்டமானது நாட்டின் கலாசாரப் பன்முகம், மொழிப் பன்முகத்தை பாதுகாக்கிறது. தேசிய கல்விக் கொள்கை ஒரு குறிப்பிட்ட மொழியைத் திணிக்கவில்லை என்றாலும் நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் ஹிந்தியை கற்பதால் மாணவா்களுக்கு நாட்டுப்பற்று வளரும், தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு வளரும்.
மேலும், வேலைவாய்ப்பு, வா்த்தகத்துக்கும், மத்திய அரசுப் பணிகளில் சேருபவா்களுக்கும் உதவியாக இருக்கும். எனவே நாம் நமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இதர மாநில மக்களைப்போல முன்னோக்கி நடைபோட முன்வர வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.
