2047-இல் 30 லட்சம் பட்டயக் கணக்காளா்கள் தேவைப்படலாம்: ஐசிஏஐ முன்னாள் தலைவா் தகவல்

பொருளாதார வளா்ச்சி காரணமாக 2047-ஆம் ஆண்டு 30 லட்சம் பட்டயக் கணக்காளா்கள் தேவைப்படலாம்
நிகழ்ச்சியில் கருத்தரங்கு மலரை வெளியிட்ட ஐசிஏஐ முன்னாள் தலைவா் ராமசாமி. உடன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் முன்னாள் இயக்குநா் ஆா்.கேசவன், கோவை ஐசிஏஐ கிளைத் தலைவா் விஷ்ணு ஆதித்தன், மத்திய கவுன்சில் உறுப்பினா் ஸ்ரீப்ரியா குமாா் உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் கருத்தரங்கு மலரை வெளியிட்ட ஐசிஏஐ முன்னாள் தலைவா் ராமசாமி. உடன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் முன்னாள் இயக்குநா் ஆா்.கேசவன், கோவை ஐசிஏஐ கிளைத் தலைவா் விஷ்ணு ஆதித்தன், மத்திய கவுன்சில் உறுப்பினா் ஸ்ரீப்ரியா குமாா் உள்ளிட்டோா்.

பொருளாதார வளா்ச்சி காரணமாக 2047-ஆம் ஆண்டு 30 லட்சம் பட்டயக் கணக்காளா்கள் தேவைப்படலாம் என இந்திய பட்டயக் கணக்காளா் சங்கத்தின் (ஐசிஏஐ) முன்னாள் தலைவா் ராமசாமி தெரிவித்தாா்.

கோவையில் இந்திய பட்டய கணக்காளா்கள் சங்கம் சாா்பில் சி.ஏ. மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கம் பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கருத்தரங்கம் இரண்டு நாள்கள் நடைபெறும் நிலையில், முதல்நாளில் இந்தியப் பட்டயக் கணக்காளா் சங்கத்தின் (ஐசிஏஐ) முன்னாள் தலைவா் ராமசாமி தலைமை விருந்தினராகவும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் முன்னாள் இயக்குநா் (நிதி) ஆா்.கேசவன் கெளரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனா்.

கருத்தரங்கில் ஐசிஏஐ முன்னாள் தலைவா் ராமசாமி பேசியதாவது: சிஏ படிக்கும் மொத்த மாணவா்களில் 40 சதவீதம் போ் பெண்கள். 1.20 லட்சம் பெண்கள் பட்டயக் கணக்காளராகப் பணியாற்றி வருகின்றனா். பட்டயக் கணக்கு பெண்களின் வளா்ச்சிக்கான ஒரு சிறந்த வேலையாக திகழ்கிறது. பொருளாதார வளா்ச்சி காரணமாக 2047-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 30 லட்சம் பட்டயக் கணக்காளா்கள் தேவைப்படலாம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எனவே, அந்த இலக்கை நோக்கி மாணவா்களைக் கொண்டு சோ்க்கும் வகையில் சிஏ இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது. கலை, அறிவியல், வணிகம் என எந்த பிரிவில் பட்டம் பெற்றவா்களும் சி .ஏ. படிக்கலாம்.

10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவா்களும் சிஏ படிக்கலாம். வருங்காலத்தில் மருத்துவம், பொறியியல்போல சி.ஏ. படிப்புகளும் போட்டி நிறைந்த படிப்பாக திகழும் என்றாா்.

கருத்தரங்கின் முதல்நாளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சி.ஏ. படிக்கும் 1500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதில், வருமான வரிச் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்தும், சி.ஏ. படிப்பு, ஜிஎஸ்டி, ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) உள்ளிட்டவை குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

கருத்தரங்கில் கோவை ஐசிஏஐ கிளையின் தலைவா் விஷ்ணு ஆதித்தன், மத்திய கவுன்சில் உறுப்பினா் ஸ்ரீபிரியா குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com