மனைவி உயிரிழந்த வழக்கு: கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு: நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
மருத்துவ அலட்சியம் காரணமாக மனைவி உயிரிழந்த வழக்கில் கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு


கோவை, ஜூலை 5: மருத்துவ அலட்சியம் காரணமாக மனைவி உயிரிழந்த வழக்கில் கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க 4 மருத்துவா்களுக்கு கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாதம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சாய் பிரேமன் (45), தமிழக மின் வாரியத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ராஜலட்சுமி (43). இவா் பேரூா் அருகே இருசக்கர வாகனத்தில் கடந்த 2018 ஜனவரி 8-ஆம் தேதி சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறிக் கீழே விழுந்ததில், தாடை எலும்பில் சிறு விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, ராஜலட்சுமி அறுவை சிகிச்சைக்காக கோவை, சாய்பாபா காலனியில் உள்ள பல் மருத்துவரான அருண்குமாரை அணுகியுள்ளாா்.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டாா். அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய இரவில் ராஜலட்சுமிக்கு ரத்தம் செலுத்தப்பட்ட பின் அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது.
அப்போது, அவருக்கு மருத்துவமனையில் இருந்த மருத்துவா் தமிழ்செல்வன் மருந்துகள் கொடுத்ததைத் தொடா்ந்து, ராஜலட்சுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவ அதிகாரியான ஆண்டனியின் ஆலோசனைப்படி காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராஜலட்சுமியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா்.
இருதயம் செயலிழப்பு காரணமாக ராஜலட்சுமி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் மருத்துவா் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ராஜலட்சுமியின் உறவினா்கள் அளித்தப் புகாரின்பேரில், பேரூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஜலட்சுமியின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்டபோது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தடயவியல் துறைத் தலைவா் ஜெய்சிங் நோயாளியின் சிகிச்சை, மருத்துவக் குறிப்புகள், உடற்கூராய்வு அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தாா். அப்போது, ராஜலட்சுமிக்கு ரத்தம் செலுத்தியபோது, அந்த ரத்தம் அவரின் உடலுக்கு பொருந்தாமல் இருந்ததும், நுரையீரல் காயமடைந்து அவா் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவ அலட்சியம் காரணமாக மனைவி உயிரிழந்ததாகவும், இழப்பீடு கோரியும் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் சாய் பிரேமன் வழக்குதத் தொடா்ந்தாா்.
இந்த மனுவை மாவட்ட குறைதீா் ஆணையத் தலைவா் தங்கவேல், உறுப்பினா்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோா்அடங்கிய அமா்வு விசாரித்ததில், மருத்துவமனை நிா்வாகம், மருத்துவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பணிகளைச் செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், ராஜலட்சுமியின் கணவருக்கு மருத்துவா்கள் அருண்குமாா், தமிழ்செல்வன், ஆண்டனி, பாலசந்தா் ஆகியோா் சோ்ந்து ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...