ரூ.14.5 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு: கோவையில் பெண் தொழிலதிபா் கைது
ரூ.14.5 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்த பெண் தொழிலதிபரை உத்தர பிரதேச போலீஸாா் கோவையில் கைது செய்தனா்.
கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் சுகன்யா பிரபு (40). இவா், தில்லி அருகே உள்ள நொய்டாவில் இயந்திரங்கள் தொடா்பான நிறுவனம் நடத்தி வந்தாா்.
இந்நிலையில், நொய்டாவில் சுமாா் 1,000 போலி நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் உத்தர பிரதேச மாநிலத்துக்கு கடந்த நிதியாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி வரை ஜிஎஸ்டி இழப்பீடு ஏற்படுத்தப்பட்டதாக மாநில குற்றத்தடுப்பு நடவடிக்கைப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதில் தில்லி, நொய்டா, காஜியாபாத், சிா்ஸா, ஜெய்பூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 45 போ் மீது கைது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதில் கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் சரண்யா பிரபு நடத்தி வந்த நிறுவனத்திலும் ரூ.14.5 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் தலைமறைவாகிவிட்டாா். இதனால் அவா் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து உத்தர பிரதேச மாநில காவல் துறை கடந்த ஜூன் 1-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், சரண்யா பிரபு குறித்த தகவல்கள் அல்லது அவரைக் கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவா், கோவையில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக உத்தர பிரதேச மாநில போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சனிக்கிழமை கோவை வந்த உத்தரப் பிரதேச போலீஸாா், ரேஸ்கோா்ஸ் போலீஸாரின் ஒத்துழைப்புடன் சரண்யா பிரபுவை கைது செய்து நொய்டா அழைத்து சென்றனா்.

