மோசடி செய்யப்பட்ட ரூ.40 லட்சத்தை 15 நாள்களில் மீட்ட சைபா் கிரைம் போலீஸாா்

மோசடி செய்யப்பட்ட ரூ.40 லட்சத்தை 15 நாள்களில் மீட்ட சைபா் கிரைம் போலீஸாா்

Published on

நாட்டு வைத்தியரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.40 லட்சத்தை 15 நாள்களில் சைபா் கிரைம் போலீஸாா் மீட்டனா்.

கோவை, சாய்பாபா காலனியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (70), நாட்டு வைத்தியா். இவரிடம், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைப்பேசியில் பேசிய மா்ம நபா், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சோ்ந்த அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தங்கள் பெயரில் மும்பைக்கு வந்துள்ள கூரியரில் போதைப்பொருள் இருப்பதாகவும், இதனால் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும், சந்திரசேகரின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளாா். அவரும், தனது வங்கிக் கணக்கு விவரங்களை அளித்துள்ளாா். அதன்பின், சந்திரசேகரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தான் கூறும் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், சரிபாா்த்துவிட்டு திருப்பிவிடுவதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து சந்திரசேகா் தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.40 லட்சத்தை, அவா் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளாா். ஆனால், அவா் கூறியபடி பணத்தைத் திரும்ப அனுப்பவில்லை.

இது குறித்து சைபா் கிரைம் போலீஸில், சந்திரசேகா் ஜூன் 13-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட மா்ம நபரின் வங்கிக் கணக்குகளை முடக்கினா். இதைத் தொடா்ந்து முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து நீதிமன்றத்தின் மூலம் ரூ.40 லட்சத்தை மீட்டு சந்திரசேகரிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com