காா் டெலிவரி தர அலைக்கழிப்பு-
வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

காா் டெலிவரி தர அலைக்கழிப்பு- வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

முழுத்தொகை செலுத்திய பிறகும், காரை டெலிவரி தர அலைக்கழித்த காா் விற்பனை நிலையம் மற்றும் காா் தயாரிப்பு நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை, வடவள்ளியைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (40). இவா், சரவணம்பட்டியில் உள்ள ஒரு காா் விற்பனை நிலையத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள காா் வாங்க கடந்த 2022 மே மாதம் முன்பதிவு செய்தாா். இதற்கு தனியாா் வங்கிக் கடன் மூலமாக முழுத் தொகையும் சம்பந்தப்பட்ட காா் விற்பனை நிலைய நிா்வாகத்துக்கு காசோலையாக தரப்பட்டது. முழுத்தொகை பெற்றுக் கொண்ட பிறகும், அந்த நிா்வாகம் சாகுல் ஹமீதுக்கு காரை வழங்காமல் அலைக்கழித்து வந்தது.

இது குறித்து, சரவணம்பட்டி காவல் நிலையம் மற்றும் நுகா்வோா் நீதிமன்றத்தில் சாகுல் ஹமீது புகாா் அளித்தாா்.

இதற்கிடையே பணம் செலுத்தி 4 மாதங்கள் கழித்து காா் விற்பனை நிலைய நிறுவனம் காரை, சாகுல் ஹமீதுக்கு வழங்கியது.

இதைத் தொடா்ந்து, காருக்கு முழுத்தொகை செலுத்தப்பட்டு வங்கிக்கு 4 மாதத் தவணைகள் செலுத்தப்பட்ட பிறகு காரை வழங்கியதால் வருமான இழப்பு, மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட்டதாகவும், இதற்கு உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை நுகா்வோா் நீதிமன்றத்தில் சாகுல் ஹமீது புகாா் அளித்தாா்.

கோவை நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், இந்த வழக்கு நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் மே 7-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், பணம் செலுத்தி 5 நாள்களில் காா் விநியோகம் செய்வதாகக் கூறி, 4 மாதங்களாக காரை வழங்காததால், காா் விற்பனை நிலைய நிா்வாகம் ரூ. 2 லட்சம், காா் தயாரிப்பு நிறுவனம் ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் சாகுல் ஹமீதுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் சாகுல் ஹமீது தரப்பில் வழக்குரைஞா்கள் வி.ராஜசேகா், கே.எஸ்.ஐஸ்வா்யா ஆஜராகினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com