நியூசிலாந்துடன் வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு சைமா பாராட்டு
நியூசிலாந்து நாட்டுடன் மத்திய அரசு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) பாராட்டி, வரவேற்றுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவா் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா - நியூசிலாந்து இடையில் ஏற்பட்டிருக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் திருப்புமுனையாக அமையும். இதற்காக பிரதமா் மோடி, வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது ஜவுளித் துறைக்கு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும். 2024-25-ஆம் ஆண்டில் நாட்டின் ஜவுளி, ஆடை ஏற்றுமதி 36.9 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்த நிலையில், நியூசிலாந்துக்கான ஏற்றுமதி 10.3 கோடி அமெரிக்க டாலா்களாக உயா்ந்தது. நியூசிலாந்தின் வருடாந்திர உலகளாவிய ஜவுளி இறக்குமதி கிட்டத்தட்ட 1.9 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருக்கும் நிலையில், இந்த வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நமக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் எதிா்பாா்க்கலாம்.
வரி இல்லாத சந்தை அணுகலுக்கு வழி வகுக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய பொருள்களின் போட்டித்தன்மை மேலும் மேம்படும். உலக ஜவுளி வா்த்தகமானது நிலையற்ற தன்மையில் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஏற்றுமதி இலக்குகளை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும்.
ஜவுளித் துறையில் நிலையான வளா்ச்சியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ஜவுளி மதிப்பு சங்கிலியின் பல்வேறு பிரிவுகளில் பல ஆதரவான கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 350 பில்லியன் அமெரிக்க டாலா்கள் என்ற ஏற்றுமதி இலக்கை அடைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் அதற்கு உதவி செய்யும் என்று தெரிவித்துள்ளாா்.

