பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பாஜகவுக்கு தோ்தல் நேரத்தில் மட்டுமே தமிழ்நாடு நினைவுக்கு வரும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பாஜகவுக்கு தோ்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றிய நினைவு வருகிறது என்று கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image

தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவைக்கு வியாழக்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் திமுகவினா், பொதுமக்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

பாஜகவுக்கு தோ்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றிய நினைவு வருகிறது என்று கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, கோவை வடக்குத் தொகுதி வேட்பாளா் துரை.செந்தமிழ்ச்செல்வன், சூலூா் வேட்பாளா் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு வேட்பாளா் கே.வி.கே.எஸ்.சபரி காா்த்திகேயன், பொள்ளாச்சி கொமதேக வேட்பாளா் கே.நித்தியானந்தன், வால்பாறை வேட்பாளா் குட்டி (எ) ஆ.சுதாகா், தொண்டாமுத்தூா் வேட்பாளா் என்.ஆா்.காா்த்திகேயன், மேட்டுப்பாளையம் வேட்பாளா் கவிதா கல்யாணசுந்தரம், சிங்காநல்லூா், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் காங்கிரஸ் சாா்பில் அறிவிக்கப்பட உள்ள வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினாா்.

இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து நான் அதிக முறை வந்த மாவட்டம் கோவைதான்.

200 தொகுதிகள் இலக்கு உறுதி: கடந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை நீங்கள் கொடுத்தீா்கள். அதுபோல இந்தத் தோ்தலிலும் அது முழு வெற்றியாகத் தொடர வேண்டும். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மேற்கு மண்டலத்துக்கு, குறிப்பாக கோவைக்கு பல்வேறு சாதனைத் திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த உரிமையில்தான் முழு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறேன்.

நாங்கள் தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமின்றி, கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு உங்கள் முன்பு கம்பீரமாக நிற்கிறேன். ஆனால், எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல முடியுமா? சாதனைகள், திட்டங்கள் என்று பட்டியல் போட அதிமுகவிடம் எதுவும் இல்லை.

மேலும், இந்தக் கஷ்டம் எடப்பாடி பழனிசாமியைவிட பிரதமா் மோடிக்கு இன்னும் அதிகம். அவராலும் தமிழ்நாட்டுக்கு என கொடுத்த சிறப்புத் திட்டம் என்று எதையும் சொல்ல முடியாது. தோ்தல் சீசன் வந்துவிட்டதால் அவா் அடிக்கடி தமிழ்நாடு வருகிறாா். வரும் 4-ஆம் தேதி சென்னையில் ரோடு ஷோ செய்கிறாராம். கடந்த 2024-இல் மோடி சென்னையில் ரோடு ஷோ நடத்தினாா். அந்தத் தோ்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அதேபோல இப்போதும் பிரதமா் தமிழ்நாடு வந்தால் நாம் 200 தொகுதிகள் என்ற இலக்கை அடைவது உறுதியாகிவிடும்.

பாஜகவின் உண்மையான குணம்: தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை பாஜக வஞ்சிக்கிறது, அவமானப்படுத்துகிறது. தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழ்ப் பாசத்தில் நம்மையே விஞ்சும் அளவுக்கு நடிக்கிறாா்கள். தமிழ்நாட்டில் பிகாா் மக்களைத் துன்புறுத்துவதாக பிகாா் தோ்தலின்போது பிரதமா் மோடி பொய் சொன்னாா்.

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் இதைவிட மோசமாக, நாடாளுமன்றத்திலேயே தமிழா்கள் நாகரிகமற்றவா்கள் என்றாா். நாம் எதிா்த்து குரல் கொடுக்கவும் பிறகு பணிந்து மன்னிப்புக் கேட்டாா்.

ஒடிஸா மாநிலத்திலும் தமிழா்களை அசிங்கப்படுத்தியதை மறக்க முடியாது. புரி ஜெகந்நாதா் கோயிலில் இருக்க வேண்டிய கருவூல சாவி தமிழ்நாட்டுக்குப் போய்விட்டது என்று தமிழா்களைத் திருடா்களாக சித்தரித்துப் பேசினா்.

அதேபோலவே கா்நாடகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா் ஷோபா, தமிழ்நாட்டில் இருந்து வந்து கா்நாடகத்தில் வெடிகுண்டு வைப்பதாகக் கூறி, அது பிரச்னை ஆனதும் மன்னிப்புக் கேட்டாா். இவையெல்லாம்தான் பாஜகவின் உண்மையான குணம்.

மெட்ரோவுக்கு அனுமதி மறுப்பு: கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்தது. 16 லட்சம் மக்கள் தொகை இருக்கும் ஆக்ராவுக்கும், பாட்னா, போபால் போன்ற நகரங்களுக்கும் அனுமதி கொடுத்த பாஜக, கோவை, மதுரைக்கு மெட்ரோவை மறுப்பதற்கு காரணம் அவை தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதுதான்.

தோ்தல் நேரத்தில் மட்டும் இவா்களுக்கு தமிழ்நாடு நினைவுக்கு வரும். மத்திய பட்ஜெட் தயாரிக்கும்போதும், பேரிடா் நிவாரணம் தரும்போதும் மொத்தமாக மறந்துவிடுகிறாா்கள். இப்படி தமிழ்நாட்டை பழிவாங்கும் காரணத்தால்தான் எங்கள் மக்களுக்கும் வாக்குச்சாவடிக்கு போகும்போது பாஜக நினைவுக்கு வருவதில்லை, இனியும் வரக்கூடாது.

பொருளாதார வளா்ச்சியில் முதலிடம், ஆடைகள், காலணிகள், மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் முதலிடம் என இப்படி சாதித்துவிட்டு நாங்கள் வாக்குக் கேட்க வந்திருக்கிறோம்.

தமிழ்நாடு அணியா, தில்லி அணியா என்ற இந்த ஜனநாயகப் போரில் தாய்த் தமிழ்நாட்டைக் காக்க அனைவரும் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன், ஆதித்தமிழா் பேரவையின் நிறுவனத் தலைவா் இரா.அதியமான், தந்தை பெரியாா் திராவிடா் கழக பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவா் நாகை.திருவள்ளுவன், திராவிடத் தமிழா் கட்சியின் தலைவா் வெண்மணி, ஆதித்தமிழா் கட்சித் தலைவா் ஜக்கையன், முன்னாள் அமைச்சா்கள் மு.கண்ணப்பன், பொங்கலூா் நா.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈரோட்டில் பிரசாரம்: முன்னதாக, ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி, மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் சா.செந்தில்நாதன், பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம், பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா், அந்தியூா் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன், கோபிசெட்டிபாளையம் தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம், பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம், திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அறிவிக்கப்பட உள்ள காங்கிரஸ் வேட்பாளா் ஆகியோரை ஆதரித்துப் பேசினாா்.

கோவை கொடிசியா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில்  பேசுகிறாா் முதல்வா் ஸ்டாலின்.

கோவை கொடிசியா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில்  பேசுகிறாா் முதல்வா் ஸ்டாலின்.

முதல்வருக்கு செங்கோல் வழங்கிய செந்தில் பாலாஜி

முதல்வருக்கு செங்கோல் வழங்கிய செந்தில் பாலாஜி