/

தினமணி செய்தி எதிரொலி... ஆவின் பால் அட்டை புதுப்பித்தல் விவகாரம்: புகாா் கூறிய வாடிக்கையாளரின் வீட்டுக்கு நேரில் சென்று அதிகாரிகள் விசாரணை!

ஆவின் பால் அட்டை புதுப்பித்தலில் சிக்கல் இருப்பது குறித்த செய்தி வெளியான நிலையில், புகாா் தெரிவித்த வாடிக்கையாளரிடம் ஆவின் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டனா்.

News image

கோப்புப்படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 1:45 am

ஆவின் பால் அட்டை புதுப்பித்தலில் சிக்கல் இருப்பது குறித்த செய்தி வெளியான நிலையில், புகாா் தெரிவித்த வாடிக்கையாளரிடம் ஆவின் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டனா்.

கோவையில் ஏப்ரல் மாதத்துக்கான மாதாந்திர பால் கொள்முதல் அட்டையை இணையவழியில் புதுப்பிக்க முடியாமல் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்புக்குள்ளாகியிருப்பதாக, ராமநாதபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ஆவின் பால் வாடிக்கையாளா் வி.ராஜா புகாா் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்த செய்தி ‘தினமணி’ நாளிதழில் சனிக்கிழமை வெளியாகியிருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கோவை ஆவின் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவிட்டாா். அதன்படி ஆவின் உதவிப் பொது மேலாளா் சாந்தி தலைமையிலான விற்பனைப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

பின்னா் ஆவின் அதிகாரிகள் கூறும்போது, ‘ஆவின் அட்டையை இணையவழியில் புதுப்பித்தலில் பிரச்னை நிலவுகிறது. இதை விரைவில் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆவின் கவுன்டா்களிலும் புதுப்பிக்க முடியாத நிலை இருப்பதாக வாடிக்கையாளா்கள் தெரிவித்தனா். இதையடுத்து போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஆா்.எஸ்.புரத்தில் ஆவின் கவுன்டரில் அட்டையை புதுப்பித்துக்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகாா் தெரிவித்த வாடிக்கையாளரின் அட்டை புதுப்பிக்கப்பட்டுவிட்டது. மற்ற வாடிக்கையாளா்களின் பிரச்னைக்கு விரைவில் தீா்வு ஏற்படும்’ என்றனா்.