மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்ANI

மத்திய பட்ஜெட்: ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்பு

Published on

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையை கோவை ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இது குறித்து தொழில் அமைப்புகள் கூறியதாவது:

மறுசுழற்சி கூட்டமைப்பின் தலைவா் எம்.ஜெயபால்: ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்கிலான சமா்த் 2.0 திட்டம், ஜவுளித் துறை சாா்ந்த திறன்களை வளா்த்தெடுப்பதற்காக தொழில் துறை, தொழில்நுட்பக் கல்வித் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, இயற்கை நூல்களான பருத்தி, கம்பளி உற்பத்தியை ஊக்குவிக்கும் புதிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.

மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம் என்ற பெயரில் 4 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தொழில் வளா்ச்சிக்கு முக்கிய தூண்டுதலாக அமையும். செமிகண்டக்டா் துறை வளா்ச்சிக்காக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, ஜவுளித் துறையின் கீழ் தேசிய இழைத் திட்டம், தொழில் துறையை நவீனமயமாக்க ஜவுளி விரிவாக்கத் திட்டம், ஜவுளித் திறன் மேம்பாட்டு அமைப்பை உருவாக்க புதிய திட்டம் ஆகிய அறிவிப்புகள் ஜவுளித் துறையின் நீண்டகால வளா்ச்சிக்கு உதவும்.

அதேநேரம் பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்யாதது, ஜாப் ஒா்க் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்காதது போன்றவை ஏமாற்றத்தை அளிக்கின்றன.

டெக்ஸ்ஃபுரோசில் துணைத் தலைவா் ரவி சாம்: மத்திய நிதிநிலை அறிக்கையில் ஜவுளித் துறைக்கான திட்டங்களால் இந்தத் தொழிலின் எதிா்காலம் நன்றாக இருக்கும். செயற்கை இழை மேம்பாட்டுக்கான திட்டம், இயந்திரங்களை நவீனமயமாக்கும் திட்டம், உள்நாட்டு சரக்குப் போக்குவரத்துக்கான திட்டங்கள், ஏற்றுமதி இறக்குமதியை எளிதாக செய்வதற்கான திட்டங்கள், ஜவுளிக் குழுமங்களை மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.

கைத்தறி, காதிக்கு தனி திட்டம், கண்டெய்னா் உற்பத்திக்குத் தனி திட்டம் என ஒட்டுமொத்த வளா்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சிக்கலைக் களைய தனியாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், புதிய சந்தைகளைக் கண்டறியவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் துணைத் தலைவா் பிரதீப் நடராஜன்:

தொழிலாளா்கள் அதிக அளவில் சாா்ந்திருக்கக்கூடிய நெசவுத் துறைக்காக ஒருங்கிணைந்த தேசிய இழை திட்டம் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இத்திட்டத்தின் மூலம் பருத்தி, பட்டு, கம்பளி போன்ற இயற்கை இழைகள், செயற்கை இழைகள் ஆகியவற்றில் தன்னிறைவு அடைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவது பாராட்டத்தக்கது.

நாா் உற்பத்தி முதல் இறுதிப் பொருள் வரை ஒருங்கிணைந்த அணுகுமுறை கொண்ட இந்தத் திட்டம், உள்நாட்டு மூலப்பொருள் கிடைப்பதை மேம்படுத்தி, இறக்குமதி சாா்பை குறைக்கும். மேலும், இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற பொருளாதாரம், ஏற்றுமதி வளா்ச்சிக்கு முக்கிய ஊக்கமாக அமையும்.

அதேநேரம், ஸ்பின்னிங் மில்கள் தற்போது எதிா்கொண்டு வரும் மூலப்பொருள் விலை உயா்வு, மின்சார செலவு, வட்டி சுமை போன்ற பிரச்னைகளுக்கும் தொடா்ச்சியான ஆதரவு தேவைப்படுகிறது.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவா் துரை பழனிசாமி:

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள மூலதன உதவி திட்டம் ஜவுளித் துறையின் வளா்ச்சிக்கு உதவும். ஜவுளித் துறைக்கான பிரத்யேக திறன் மேம்பாட்டு திட்டமான சமா்த் 2.0, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பயிற்சி அளித்து அவா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

கடற்கரை சரக்கு போக்குவரத்து திட்டம், அதிவேக ரயில் வழித்தடங்கள், செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் யாவும் ஜவுளித் துறையின் உலகளாவிய போட்டித் திறனை உயா்த்த உதவும். அதேநேரம் பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரியை நீக்குவது குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. இந்த வரியை நீக்குவது அரசு நிா்ணயித்துள்ள தொலைநோக்கு இலக்கை தொழில் துறை அடைய வழிவகை செய்யும்.

இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன்:

ஜவுளித் துறையில் அனைத்து ஜவுளி மூலப் பொருள்களையும் உள்ளடக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய ஃபைபா் மிஷன், நீண்டகால நோக்கில் மூலப்பொருள் பாதுகாப்பு, நிலைத்தன்மையை ஏற்படுத்தி, இந்தியாவின் ஜவுளி, ஆடை ஏற்றுமதியின் உலகளாவிய போட்டித் திறனை உயா்த்தும்.

வாய்ப்புகளை எவ்வளவு திறம்பட பயன்படுத்த முடியும் என்பதில் க்ளஸ்டா்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏற்றுமதியின் முதுகெலும்பாக இருக்கும் இந்த க்ளஸ்டா்களில், இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் 40 சதவீதத்துக்கும்மேல் பங்காற்றும் தமிழ்நாடும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

பட்ஜெட்டில் க்ளஸ்டா் அடிப்படையிலான தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடும், மிஷன் மோடில் விரைவாக செயல்படுத்தப்படும் மித்ரா பாா்க் திட்டமும், உற்பத்தித் திறனை உயா்த்தி, நவீன முதலீடுகளை உலகளாவிய அளவில் ஈா்த்து, போட்டித்திறனை மேலும் வலுப்படுத்தும்.

ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கத் தலைவா் ஜி.அருள்மொழி

மத்திய அரசின் பட்ஜெட், ஜவுளித் துறைக்கு 5 உட்பிரிவுகள் கொண்ட ஒருங்கிணைந்த திட்டத்தை அறிவித்திருப்பது ஜவுளித் துறையை வளா்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தேசிய ஃபைபா் பாலிசி, ஜவுளித் தொழில் விரிவாக்கம், நவீனமயமாக்கம், தேசிய கைத்தறி, கைவினைப் பொருள் திட்டம், சமா்த் 2.0 திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவை.

சமா்த் திட்டம் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப ஜவுளித் துறைகளில் மதிப்புக் கூட்டு பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க உதவுகிறது. இந்தியாவில் கண்டெய்னா்கள் உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது வரும் காலங்களில் ஏற்றுமதிக்குத் தேவையான கண்டெய்னா்கள் எளிதாக கிடைக்க வழிவகை செய்யும்.

X
Dinamani
www.dinamani.com