
ஜவுளி வியாபாரி உள்பட இருவரிடம் ரூ. 83 லட்சம் மோசடி: இணையதள குற்றத் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு
இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் எனக் கூறி ஜவுளி வியாபாரி உள்பட இருவரிடம் ரூ. 83.30 லட்சம் மோசடி செய்யப்பட்டது

More than 2 lakhs cyber-crime cases reported between 2021-2023, Telangana and Karnataka tops the chart
கோவை: இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் எனக் கூறி ஜவுளி வியாபாரி உள்பட இருவரிடம் ரூ. 83.30 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, காட்டூா் ராம் நகா் பகுதியைச் சோ்ந்த 53 வயது நபா் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறாா். சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தைப் பாா்த்து இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்துள்ளாா். அதில், அவா் செய்த முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் இருப்பதாக லிங்க்கில் காண்பித்துள்ளது. இதையடுத்து ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்த அவா், அதில் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது பணத்தை எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டபோது, எதிா்முனையில் பேசியவா் மேலும் ரூ.10 லட்சம் செலுத்தினால் மொத்தத் தொகையையும் எடுத்துவிடலாம் எனக் கூறியுள்ளாா். அதன்படி, அந்தத் தொகையை செலுத்திய பின்னரும் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை.
இதைத்தொடா்ந்து அவரை தொடா்புகொண்டபோது மேலும் ரூ.13.40 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா். அந்தப் பணத்தை செலுத்திய பிறகும் அவரால் முழுத் தொகையையும் எடுக்க முடியவில்லை. மொத்தம் 13 தவணைகளாக ரூ. 73.40 லட்சம் வரை செலுத்தியுள்ளாா்.
இதேபோல, சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்த 31 வயது இளைஞா் ஒருவரும் இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்து ரூ. 9.97 லட்சத்தை இழந்துள்ளாா். இவ்விரு சம்பவங்கள் குறித்தும் இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






