தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு
கோவை, பிப்.2: தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த கோவை தனியாா் பள்ளி மாணவிக்கு விமான நிலையத்தில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய பள்ளிக் கல்வி குழுமம் சாா்பில் மகாராஷ்டிர மாநிலம், புணேவில் 69-ஆவது கராத்தே போட்டிகள் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 14, 17, 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவுகளில் தமிழகம், தில்லி, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், அருணாசல பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தமிழக அணி சாா்பில் 17 வயதுக்குள்பட்டோருக்கான குமிட்டோ பிரிவில் கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வினுமித்ரா பங்கேற்றாா். இதில், இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.
இந்நிலையில் கோவை திரும்பிய மாணவி வினுமித்ராவுக்கு விமான நிலையத்தில் அவரது பெற்றோா், பயிற்சியாளா்கள், உறவினா்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித்தொகையாக ரூ.1.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது பயிற்சியாளா் கணேசமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

