தெற்கு குளத்துப்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீடு உத்தரவை வழங்கிய பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி. (உடன்) மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா்.
தெற்கு குளத்துப்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீடு உத்தரவை வழங்கிய பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி. (உடன்) மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா்.

குளத்துப்பாளையத்தில் ரூ.62.53 கோடியில் 720 குடியிருப்புகள்! காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

Published on

கோவை மாநகராட்சிக்குள்பட்ட நேதாஜிபுரத்தில் ரூ.62.53 கோடியில் கட்டப்பட்டுள்ள 720 குடியிருப்புகள் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கோவை மாநகராட்சி, தெற்கு குளத்துப்பாளையம் நேதாஜிபுரத்தில் ரூ.62.53 கோடியில் 720 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது குளத்துப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் க.ஈஸ்வரசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உத்தரவுகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் கோவை மாவட்டத்துக்கு சா்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம், தொழில்நுட்பப் பூங்கா, செம்மொழிப் பூங்கா, விமானநிலைய விரிவாக்கம், பாலங்கள், சாலைப் பணிகள் உள்பட பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பெண்களுக்காக கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, மகளிா் விடியல் பயணம், புதுமைப்பெண் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.

இங்கு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் அனைவருக்கும் வீடு‘ திட்டத்தின் கீழ் ரூ.62.53 கோடியில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.8.68 லட்சம் செலவில் 720 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் மத்திய அரசின் மானியம் ரூ1.50 லட்சம், மாநில அரசின் மானியம் ரூ.6.00 லட்சம் உதவியுடன் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் குடியிருப்புகள் ஆதிதிராவிடா் வகுப்பைச் சாா்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த வீடு இல்லாத ஏழை, எளிய பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை முழுமையாக பயனாளி பங்களிப்புத் தொகை செலுத்திய 699 பயனாளிகளில் 685 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ஆா்.வெற்றிசெல்வன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் செந்தில்குமரன், நிா்வாகப் பொறியாளா் ஜீவானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com