அரசு மருத்துவமனையில் நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களை பணியில் சோ்க்கவிட்டால் போராட்டம்! - சிவசேனா
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் நீக்கம் செய்யப்பட்ட 20 தூய்மைப் பணியாளா்களையும் மீண்டும் பணியில் சோ்க்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் நிகழ்ச்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கேரள மாநிலத் தலைவரும், தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளருமான சஜித் திருத்திக்குனில், மாநில செயல் தலைவா் தஞ்சை க.சசிகுமாா் ஆகியோா் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த 20 தூய்மைப் பணியாளா்களை எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் தனியாா் நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இந்தத் தொழிலாளா்கள் இ.எஸ்.ஐ., பி.எஃப் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், ஊதிய ரசீதை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்ததால் தனியாா் ஒப்பந்த நிறுவனம் அவா்களை பணிநீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது.
இது தொடா்பாக இருப்பிட மருத்துவ அலுவலரிடம் அளித்த மனுவுக்கு எந்தவிதமான பதிலும் இல்லை. இந்தத் பணியாளா்களை 10 நாள்களுக்குள் பணியில் சோ்க்காவிடில் அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் திரட்டி சிவசேனா சாா்பில் கோவையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
அதே வேளையில், தொழிலாளா்களின் நலனுக்கு எதிராக செயல்படும் தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை அரசு ரத்து வேண்டும். தனியாருக்கு ஆதரவாக செயல்படும் இருப்பிட மருத்துவ அலுவலா் மீது விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய வேண்டும்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி தலைமை முடிவின்படி தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டோம். இந்தத் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளோம் என்றனா்.
முன்னதாக, புதிய நிா்வாகிகளை சிவசேனா தலைமை ஒருங்கிணைப்பாளரும், செயலாளருமான மா.முருகன் அறிவித்தாா். இந்த சந்திப்பில், மாநில அமைப்புச் செயலா் டி.செந்தில், பாரதிய காம்கா் சேனா மாநிலச் செயலா் எஸ்.பி. மாரிசெல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
