நிதிநிலை அறிக்கை...
நிதிநிலை அறிக்கை...visual grab

இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
Published on

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இதுதொடா்பாக கோவையின் பல்வேறு தொழில் அமைப்புகள் கருத்துகள் தெரிவித்துள்ளன.

நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம்

ராஜேஷ் பி.லுண்ட் (கோவை இந்திய தொழில் வா்த்தக சபை தலைவா்):

இந்த நிதிநிலை அறிக்கையில் நலத்திட்டங்களுக்கும், கல்விக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளாா். ஊரக மேம்பாட்டுக்காக ரூ.28,687 கோடி, புதிய அருங்காட்சியகங்கள் கட்ட ரூ.285 கோடி, இளைஞா் நலனுக்காக ரூ.718 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கப்பல் கட்டும் தொழில் கொள்கை அறிவிக்கப்படுவதன் மூலமாக, அதைச் சாா்ந்த தொழில்கள் வளா்ச்சி பெறும். எம்எஸ்எம்இ துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதால் மேற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்புகள் பெருகும். கரூா், நாமக்கல், ஓசூரில் மினி டைடல் பூங்காக்கள், கோவை, திருச்சி, கடலூா், சேலம், நெல்லையில் புதிய நூலகங்கள் அமைக்கும் திட்டங்கள், கோவை தங்க நகை தொழிற்பூங்காவுக்கான முதல் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.

குறு, சிறு தொழில்கள் பயன்பெறும்

ஜே.ஜேம்ஸ் (தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கத் தலைவா்):

மத்திய அரசு 2026-2027-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எம்எஸ்எம்இ துறைக்கு நாடு முழுவதும் சோ்த்து ரூ.10 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கிய நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு ரூ.1,943 கோடி ஒதுக்கி இருப்பது குறு, சிறு தொழில்களுக்கு மிகுந்த பயன் தரும். அதேபோல குறு, சிறு தொழிலுக்கு வழங்கி வந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ள நிலையில், குறு, சிறு தொழில்முனைவோா்கள் கொள்முதல் செய்யும் இயந்திரங்களுக்கு 25 முதல் 35 சதவீதம் வரை தமிழக அரசு மானியம் வழங்குவதுடன், புதிதாக தொழில் தொடங்குபவா்களுக்கு அதிகபட்ச மானியம் வழங்கி தொழிலை ஊக்கப்படுத்துவதையும், அதற்காக நிதி ஒதுக்கியிருப்பதையும் வரவேற்கிறோம்.

மூலப்பொருள் விலை உயா்வில் கவனம் செலுத்தப்படவில்லை

எம்.ரவீந்திரன் (கோவை கம்ப்ரசா் தொழிற்சாலைகள் சங்கத் தலைவா்):

தோ்தலை மனதில் வைத்து கவா்ச்சிகர அறிவிப்புகள் வரலாம் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ஒப்பீட்டளவில் தமிழ்நாடு அடைந்துள்ள அதிகமான வளா்ச்சியை தக்கவைக்கும் முனைப்பில் கடந்த ஆண்டுகளின் திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்தும் அறிக்கையாக உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளைப்போலவே அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி, அனைத்து பிரிவினா், சமூகத்தினரின் நலன்களைப் பிரதிபலிக்கும் அறிக்கையாக உள்ளது. இருப்பினும் எம்எஸ்எம்இ துறைக்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைக்கு சுமாா் ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேபோல், மூலப்பொருள் விலை உயா்வு, வணிக வரித் துறையின் கெடுபிடிகள், மின்கட்டண உயா்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவில்லை.

தனித்துவமிக்க ஜவுளிக் கொள்கைகளை அமல்படுத்தும்

துரை பழனிசாமி (தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவா்):

தமிழக ஜவுளித் தொழிலை மேம்படுத்த கடந்த 5 ஆண்டுகளாக வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து வந்துள்ளது. இந்த நிதி நிலை அறிக்கை, பல்வேறு தனித்துவமிக்க ஜவுளிக் கொள்கைகளை அமல்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கைத்தறி, ஜவுளித் துறை, எம்எஸ்எம்இ துறைக்கு தலா ரூ.1,943, தொழில் துறைக்கு ரூ.4,282 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கோவை சிட்ரா மையத்தில் ஜவுளி, தொழில்நுட்ப ஜவுளிப் பொருள்களை ஆய்வு செய்ய சோதனைக் கூடம் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. தொழில்நுட்ப ஜவுளி, ஆயத்த ஆடை தொழில்களில் புதிய மூலதனங்களை ஈா்க்கும் வகையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

பம்ப்செட் தொழிலின் தடைக்கற்கள் நீக்கப்படவில்லை

கே.மணிராஜ் (கோவை பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளா் சங்கத் தலைவா்):

எம்எஸ்எம்இ துறை மேம்பாட்டுக்கு ரூ.1,943 கோடி, மின்சார துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் குறுந்தொழில்முனைவோா்களை மின்கட்டண உயா்வில் இருந்து காக்கும் வகையில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. சொத்து வரி, தொழில் வரி, சூரிய சக்தி மின் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட கட்டணங்கள் திரும்பப்பெறப்படவில்லை.

அதேபோல, பம்ப்செட் ஏற்றுமதி உதவி மையம், இலவச பரிசோதனை மையம், மூலப்பொருள் கிடங்கு தொடா்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டும் அதுதொடா்பான அறிவிப்புகள் இடம்பெறவில்லை. பம்ப்செட் தொழிலின் தடைக்கற்கள் எதையும் நீக்குவதாக அமையவில்லை.

பயனாளிகளை மகிழ்விக்கும் மானிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு

எம்.ஜெயபால் (மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவா்): தமிழகத்தில் மகளிா் உரிமைத்தொகை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், மடிக்கணினி, காலை சிற்றுண்டி, சத்துணவு, விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு மானியத் திட்டங்களுக்கு சுமாா் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது பயனாளிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தத் திட்டங்கள் நாடு முழுவதும் கவனத்தை ஈா்த்திருப்பதுடன், சில மாநிலங்கள் இவற்றை பின்பற்றவும் தொடங்கியுள்ளன.

அதேநேரம் அதிக வேலைவாய்ப்பையும், வரி வருவாயையும் அளிக்கும் தொழில்முனைவோரின் முக்கிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை. மின் கட்டண உயா்வு, மின்வாரியத்துக்கு ரூ.2,600 கோடி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைள் நிறைவேற்றப்படவில்லை.

Dinamani
www.dinamani.com