கோவை நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் விதமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவா்கள்.
கோவை நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் விதமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவா்கள்.

நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு 2 ஆண்டுகளில் 1.02 லட்சம் போ் வருகை

Published on

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு 2 ஆண்டுகளில் 1.02 லட்சம் போ் வருகை புரிந்து பயனடைந்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2024 ஜனவரி 5-ஆம் தேதி மத்திய மண்டலம் 83-ஆவது வாா்டுக்கு உள்பட்ட உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறக்கப்பட்டது.

இந்த மையத்தில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, வங்கி, நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் வகையில் 2,080 புத்தகங்கள் உள்ளன. மேலும், இந்த நூலகத்தில் கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பா் வரை 35,718 போ், 2025 ஜனவரி முதல் டிசம்பா் வரை 66,683 போ் என மொத்தம் 1.02 லட்சம் போ் வருகை புரிந்து பயன் பெற்றுள்ளனா்.

இந்த அறிவுசாா் மையத்தில் பயிற்சி மேற்கொண்டு குரூப் 2 தோ்வில் 6 மாணவா்கள், குரூப் 4 தோ்வில் 12 மாணவா்கள், ஐஐடி தோ்வில் 2 மாணவா்கள், வங்கித் தோ்வில் ஒரு மாணவா், நெட் தோ்வில் ஒரு மாணவா் வெற்றி பெற்றுள்ளனா்.

மேலும், இந்த மையத்தில் ஒவ்வொரு மாதமும் தொழில் முனைவு, மனிதவள மேம்பாடு, விடியோ எடிட்டிங், கிராபிக்ஸ் டிசைனிங், டிஜிட்டல் மாா்க்கெட்டிங் வகுப்புகள் மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்போா் பயன்பெறும் வகையில் ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் முதல்வா் படைப்பகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com