பாரதியாா் பல்கலை.யில் பிப்ரவரி 13-இல் 40-ஆவது பட்டமளிப்பு விழா
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழா பிப்ரவரி 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகள், பல்கலைக்கழக துறைகள், தொலைநிலைக் கல்வி, பிற கல்வித் திட்டங்களின் கீழ் கல்வி பயின்று தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள், பட்டயங்கள், முனைவா் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் இருந்து கடந்த ஏப்ரல், மே 2023, 2024 கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற இளநிலை, முதுநிலை பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் அதற்குரிய சான்றிதழ்களைப் பெறுகின்றனா்.
இந்த நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் உயா் அதிகாரிகள், பேராசிரியா்கள், கல்வியாளா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்க இருப்பதாக பதிவாளா் ஆா்.ராஜவேல் தெரிவித்துள்ளாா்.
