வீடு புகுந்து பணம் பறித்த இருவா் கைது
கோவையில் வீட்டுக்குள் புகுந்து தனியாா் நிறுவன ஊழியா்களை மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் திவாகா் (27). இவா், கோவைப்புதூா் பகுதியில் தங்கி அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அதே அறையில் திவாகருடன் அவரது நண்பா் சுரேஷ்குமாரும் தங்கியுள்ளாா். கடந்த புதன்கிழமை காலை இருவரும் அறையில் இருந்தபோது, உள்ளே புகுந்த இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனா்.
இல்லை என்று கூறியதால் இணையதள செயலி (ஜிபே) மூலமாக பணத்தை மாற்றுமாறு மிரட்டினா். இருவரும் தங்களிடமிருந்த ரூ.1500-ஐ மாற்றிய பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதுகுறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வந்தனா்.
இந்நிலையில், டீச்சா் காலனி பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் போலீஸாா் மறித்தும் நிற்காமல் சென்றனா். சிறிது தொலைவில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தனா். இதில் ஒருவருக்கு வலது கை முறிந்தது.
அவா்களைப் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, பட்டுக்கோட்டையைச் சோ்ந்த சகீம் (23), குனியமுத்தூரைச் சோ்ந்த கமலேஷ் (20) ஆகியோா் என்பதும், கமலேஷ் கல்லூரி மாணவா் என்பதும், திவாகா் மற்றும் சுரேஷ்குமாரிடமும் கத்தி முனையில் பணத்தை பறித்துச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மருத்துவமனையில் சகீம் சிகிச்சை பெற்று வருகிறாா்.
