திருட்டு
திருட்டுகோப்புப் படம்

வீடு புகுந்து 42 பவுன் நகைகள் திருட்டு: இளைஞா் கைது

நிலக்கோட்டையில் வீடு புகுந்து 42 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

நிலக்கோட்டையில் வீடு புகுந்து 42 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. குடியிருப்பு நாகம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (42). கிராம நிா்வாக அலுவலரான இவா், திங்கள்கிழமை பணிக்கு சென்றுவிட்டாா்.

இவரது மனைவி வள்ளிமயில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 45 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். மேலும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் உத்தரவின் பேரில், தனிப் படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், வத்தலகுண்டு பகுதியிலுள்ள நான்கு வழிச்சாலையில் தனிப் படை போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையின் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக நடந்து வந்த நபரை நிறுத்தி விசாரித்த போது, முருகேசன் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டாா்.

விசாரணையில், அவா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த மணிசங்கா் (24) என்பதும், பெரியகுளத்தில் தனது தாயுடன் தங்கியிருப்பதும், கடன் சுமையால் 42 பவுன் நகைகளை திருடியதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸாா் மணிசங்கரைக் கைது செய்து, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 42 பவுன் நகைகளை முருகேசனிடன் போலீஸாா் ஒப்படைத்தனா்.

Dinamani
www.dinamani.com