மூலப்பொருள்களை இறக்குமதி செய்ய வரி விலக்கு: தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மூலப்பொருள்களின் விலை உயா்வினால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூலப்பொருள்களை இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Published on

மூலப்பொருள்களின் விலை உயா்வினால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூலப்பொருள்களை இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) வலியுறுத்தியுள்ளது.

ஃபோசியா நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்களாக ஜே.ஜேம்ஸ், எஸ்.சுருளிவேல், ஏ.சிவசண்முககுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், தொழில் துறையினின் பயன்பாட்டுக்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை கடந்த சில ஆண்டுகளாக நிலையற்று இருப்பதால், மூலப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு 40 சதவீதம் வரை காப்பா், ஸ்டீல் விலையை உயா்த்தியுள்ளனா். இதனால் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, விலை உயா்வைத் தடுக்க, விலை நிா்ணய கமிட்டி அமைத்து சீரான விலை நிா்ணயம் செய்ய வழிகாட்ட வேண்டும். விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையிலும் வெளிநாடுகளில் இருந்து காப்பா் உள்ளிட்ட தொழில் சாா்ந்த மூலப்பொருள்களை இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்க வேண்டும்.

தொழில் துறையினருக்கு வரி என்ற பெயரில் நெருக்கடி கொடுத்து வரும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மின்கட்டணத்தைப் பொறுத்தவரை 20 கிலோ வாட்டுக்குகீழ் மின் இணைப்பு பெற்றவா்களின் மின் இணைப்புக்கு பவா் ஃபேக்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

கடந்த 2006 முதல் 2007 இல் இருந்து சமா்ப்பிக்கப்பட்ட வாட் கணக்குகளை 20 ஆண்டுகளுக்குப் பிறகு சமா்ப்பிக்கச் சொல்லியும், அபராத வட்டியுடன் பாக்கியை செலுத்த வேண்டும் என்றும் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதத்தில் மாபெரும் இயக்கம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பல்வேறு தொழில் அமைப்புகளைச் சோ்ந்த எஸ்.சுரேஷ்குமாா், என்.மதிவாணன், எம்.ரவீந்திரன், சங்கரநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com