கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்
கறிக்கோழி கூலி உற்பத்தி தொடா்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோவை மாநகர மகளிரணி செயலாளா் மு.லோகேஸ்வரி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கறிக்கோழிக் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனங்கள் திட்டமிட்டு விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் தொடா்ந்து நடந்து கொள்கின்றனா். விவசாயிகளிடம் காசோலை மற்றும் பாண்டு பேப்பா் மூலம் எழுதிப் பெற்றுக் கொண்டு குஞ்சுகளை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்து பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி குஞ்சுகளை அடாவடியாக விவசாயிகள் இடத்தில் இறக்கி வந்தனா். கறிக்கோழி உற்பத்தி கூலி உயா்வு தொடா்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துப் போராடி வந்த நிலையில், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் பொய்யான புகாரின் அடிப்படையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, கூட்டுறவு சங்க அணி செயலாளா் குப்புசாமி உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். சட்டவிரோதமாகக் கைது செய்துள்ள போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பேச்சுவாா்த்தை நடத்தும் வரையில் போராட்டத்தை திசைதிருப்பும் போக்கை நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
