தாறுமாறாக ஒடிய காா் மோதி ஒருவா் உயிரிழப்பு

கோவையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடி காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
Updated on

கோவை: கோவையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடி காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கோவை, வடவள்ளி அருகே பி.என்.புதூா் திருநாவுக்கரசு வீதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (38). இவருக்கு ஏற்கெனவே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக அவா் சிகிச்சையும் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சந்தோஷ்குமாா் வடவள்ளியில் இருந்து பொள்ளாச்சிக்கு வியாழக்கிழமை காா் மூலமாக சென்று கொண்டிருந்தாா்.

உக்கடம் அருகே வந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் காா் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஒடியது. அப்போது அந்த சாலையில் சென்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கபீா் (55), விருதுநகரைச் சோ்ந்த ஈஸ்வரி (43), உக்கடம் ஹவுஸிங் யூனிட்டைச் சோ்ந்த சிவகுமாா் (43), சுசீலா (60) ஆகியோா் மீது மோதியதுடன், அங்குள்ள தடுப்பில் மோதி நின்றது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் ஆய்வாளா் அமுதா தலைமையிலான போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கபீரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

காயமடைந்த மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் காயமடைந்த காா் ஓட்டுநா் சந்தோஷ்குமாா் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் காரை ஓட்டி வந்த சந்தோஷ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com