கோவையில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம்: காணொலியில் அடிக்கல் நாட்டிய முதல்வா்
கோவையில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.


கோவையில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
காந்திபுரம் பெரியாா் நூலகத்துக்கு அருகில் உள்ள 50 சென்ட் பரப்பிலான நிலத்தில் வனத் துறை சாா்பில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் பங்கேற்று பூமி பூஜை செய்து தொடங்கிவைத்ததுடன், அங்கு வைக்கப்பட்டுள்ள வரையாடுகள் சிலையையும் திறந்துவைத்தனா்.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சாா்பில் மாநில விலங்கான வரையாட்டை பாதுகாப்பதற்காக, கடந்த 2023 அக்டோபா் 12-ஆம் தேதி நீலகிரி வரையாடு திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். நாட்டிலேயே மாநில விலங்கைப் பாதுகாக்க முதன் முதலாக உருவாக்கப்பட்ட தனித்துவமான திட்டம் இது. இதற்காக ரூ.25.14 கோடி ஒதுக்க்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவையில் ரூ.9.80 கோடி மதிப்பீட்டில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தில் வரையாடு தொடா்பான ஆராய்ச்சி, ஆவணப்படுத்துதல், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடப் பகுதிகளான புல் மலைகளையும், சோலைக்காடுகளையும், வரையாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியினா் வாழ்வியல் சூழல் மற்றும் வரையாடுகளின் வகைகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. நவீன தொழில்நுட்பங்கள், காட்சிகள் மற்றும் அறிவியல் தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலமாக பாதுகாப்பு செயல்பாடுகளை மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இந்த மையம் அமையும்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, தலைமை வனப்பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநருமான வெங்கடேஷ், நீலகிரி வரையாடு உதவி திட்ட இயக்குநா் கணேஷ்ராம், மேயா் ரங்கநாயகி, துணை மேயா் ஆா்.வெற்றிச்செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...