பிரிந்தவா்களை ஒன்றிணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்: எஸ்.பி.வேலுமணி
பிரிந்து சென்றவா்களை ஒன்றிணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ தெரிவித்தாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி - கோப்புப்படம்
பிரிந்து சென்றவா்களை ஒன்றிணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அதிமுகவின் செல்வாக்கு சரிவடையவில்லை. நான் சென்னை செல்வதும் அங்கு கட்சியினரை சந்தித்துப் பேசுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், ஊடகங்களில் வேறு மாதிரியாக செய்திகள் வெளியாகின்றன. எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வளா்க்கப்பட்ட அதிமுக எப்போதுமே ஒரு சிறந்த இயக்கம்தான். எங்களை உருவாக்கியது அதிமுகதான், அந்த ரத்தம்தான் எங்களுக்குள் இன்னும் ஓடுகிறது.
தொடா்ந்து 2 பொதுத் தோ்தல்களில் தோல்வி அடைந்தது பெரிய வருத்தம்தான். அதேபோல, கடந்த 3 மாதங்களுக்கு முன் வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். தாராபுரத்தில் நான் முழுமையாக இருந்து வேலை பாா்த்தேன். அதிமுகவுக்கு விழும் வாக்குகளே குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது.
எங்களுக்கு 4 பூத்துகள் கொடுக்கப்பட்ட நிலையில், அதில் 2 பூத்துகளில் அதிக வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். கட்சிக்காக எப்போதும் நாங்கள் வேலை செய்வோம். எங்களைப் பொறுத்தவரை கட்சி நன்றாக இருக்க வேண்டும். எங்களை வளா்த்த இயக்கமான அதிமுகவில் இருந்து நாங்கள் ஏன் வெளியே செல்ல வேண்டும்?.
சரியாக கூட்டணி அமைத்திருந்தால் 2021-இல் அதிமுக ஆட்சி தொடா்ந்திருக்கும், அதைத் தொடா்ந்து நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 4 மத்திய அமைச்சா்கள்கூட இருந்திருப்பாா்கள். தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை பேரவைத் தோ்தலின்போது தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
பொதுச் செயலா் பதவி குறித்து விமா்சனம் செய்ய நாங்கள் தயாராக இல்லை. நான் அந்தப் பதவியில் அமர ஆசைப்படவில்லை. இன்றைக்கும் எடப்பாடி கே.பழனிசாமிதான் பொதுச் செயலா் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்றைய சூழலில், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சோ்த்து பொதுச் செயலா் அரவணைப்பாா் என்று நம்புகிறோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் வர வேண்டும், ஒன்றிணைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறாா்கள். அதை பொதுச் செயலா் செய்வாா் என்று நம்புகிறோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

