
மக்கள் நீதிமன்றத்தில் 4,085 வழக்குகளுக்கு தீா்வு
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 27 அமா்வுகள் மூலமாக 4,085 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

விபத்து வழக்கில் கோகுலகிருஷ்ணன் என்பவருக்கு ரூ.80 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய மாவட்ட நீதிபதி ஜே.ஸ்ரீதேவி.
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 27 அமா்வுகள் மூலமாக 4,085 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.
கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஜே.ஸ்ரீதேவி தலைமை வகித்தாா்.
மலுமிச்சம்பட்டி அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் இடது காலை இழந்த கோகுல கிருஷ்ணன் என்பவருக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக ஏற்பட்ட சமரச தீா்வின் அடிப்படையில் விபத்து வழக்குக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.80 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
நிலுவையில் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் மொத்தம் 4,085 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மொத்த தீா்வுத் தொகை ரூ.55 கோடியே 62 லட்சத்து 57 ஆயிரத்து 680. மேலும், 5 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 49 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவா் (பொறுப்பு) மற்றும் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான முதலாவது சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜி.நாராயணன், மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் ஆகியோா் அடங்கிய 27 அமா்வுகள் மூலமாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், நீதிபதியுமான கே.செந்தில்குமாா் செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





