பவானி ஆற்றில் தங்கு தடையின்றி மணல் திருட்டு

பவானி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், இரவு, பகலாக தடையின்றி மணல் திருட்டு நடைபெறுவதால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Published on
Updated on
2 min read

பவானி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், இரவு, பகலாக தடையின்றி மணல் திருட்டு நடைபெறுவதால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 பவானிசாகர் அணையிலிருந்து புறப்படும் பவானி ஆறு, பவானி அருகே கூடுதுறையில் காவிரி ஆற்றில் சங்கமிக்கிறது. மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு வேகமாகத் தண்ணீர் ஓடுவதால் பவானி ஆற்றில் எப்போதும் கூழாங்கற்களும், மணலும் இருந்து கொண்டேயிருக்கும். இந்த மணல் கட்டுமானப் பணிக்கு தகுதியற்றதாக இருந்தபோதிலும் தொடர்ந்து இரவு, பகல் பாராமல் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றின் மணல் விலை அதிகம் என்பதாலும், பவானி ஆற்று மணல் குறைந்த விலைக்கு கிடைப்பதாலும் சிறு கட்டுமானப் பணிகளுக்கு வாங்கப்படுகிறது.
 அதிகாரிகளுக்குப் பயந்து இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் நடைபெற்று வந்த மணல் திருட்டு தற்போது பகல் நேரத்திலும் துணிகரமாக நடைபெறுகிறது. பவானி, எலவமலை, சேர்வராயன்பாளையம், சீதபாளையம், மூலப்பாளையம், திப்பிசெட்டிபாளையம், தளவாய்பேட்டை, ஆப்பக்கூடல் பகுதிகளில் சர்வ சாதாரணமாக மணல் திருடப்பட்டு வருகிறது.
 ஆற்றிலிருந்த மணல் வளம் தொடர்ந்து சுரண்டப்பட்டதால் தற்போது குறைந்த அளவிலேயே மணல் காணப்படுகிறது. இதனையும் விடாமல் சுரண்டும் பணிக்காக ஆற்றின் நடுவில் இரும்புக் கம்பிகளை நட்டு ராட்சத இரும்பு கொப்பறைகள் கட்டப்படுகின்றன.  இதையடுத்து, தண்ணீருக்குள் மூழ்கி தரையில் உள்ள மணலை பக்கெட்டில் நிரப்பி கொப்பறைக்குள் கொட்டப்படுகிறது. கொப்பறைகள் மணலால் நிரம்பியதும் கரைக்குத் தள்ளி வரப்பட்டு, கரையோரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் சல்லடைக்குள் வீசப்பட்டு, சலித்து சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர், குவித்து வைக்கப்பட்டு மணல் டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
 தொடர்ந்து, மணல் சுரண்டப்பட்டதால் தண்ணீர் நிலத்துக்குள் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றில் செயல்படும் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் புதை கிணறுகளைச் சுற்றிலும் மணல் குறைந்து தண்ணீர் வடிவது பாதிக்கப்படுகிறது.
 பவானி ஆற்றுக்கு இயற்கை கொடுத்த வரமான மணலைச் சுரண்டி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டைத் தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். பவானி ஆற்றுக்குள் வாகனங்கள் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்வராயன்பாளையம் கிளைச் செயலரும், பவானி ஒன்றியத் துணைச் செயலருமான எஸ்.பி.நஞ்சப்பன் கூறியதாவது:
 பவானி ஆற்றில் நடைபெற்று வரும் மணல் திருட்டைத் தடுக்க பலமுறை மனு அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், மணல் திருடிச் செல்லும்போது பிடித்துத் தருமாறு வருவாய்த் துறையினர் கூறுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் மணல் திருட்டுக்கு முடிவே இருப்பதில்லை என்றார்.
 பவானி, அணைநாவிதம்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.சம்பத் கூறியதாவது:  
 பகல் நேரத்திலும், மாலை நேரம் தொடங்கி இரவு முழுவதும் விடிய விடிய டிராக்டரில் மணல் கடத்தப்படுகிறது. தனியார் மட்டுமின்றி அரசாங்கப் பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் பவானி ஆற்று மணலையே பயன்படுத்துகின்றனர் என்றார்.
 இதுதொடர்பாக, வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, பவானி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்க தொடர் கண்காணிப்பும், நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com