காதல் ஜோடியை கடத்தி, பணம் கேட்டு மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், மாவீரன் தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உள்பட மூன்று பேர் ஈரோடு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா (19). இவர், ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்ஸி படித்து வந்தார். இவர், அதே கல்லூரியில் படித்துவந்த சென்னிமலை, பிடாரியூரை சேர்ந்த பாலாஜி என்பவரைக் காதலித்து கடந்த 2013இல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் நாமக்கல், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர். பின்னர் பாலாஜியின் நண்பரான சரவணனிடம் இருவரும் உதவி கேட்டுள்ளனர். சரவணன் இருவரையும் பெருந்துறைக்கு வருமாறு கூறியுள்ளார். அதையடுத்து, கடந்த 22.4.2013இல் ஹேமலதாவும், பாலாஜியும் பெருந்துறைக்கு வந்தனர்.
இவர்களை, சரவணனின் நண்பரான அமுதரசு, மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் தலைவரான யுவராஜ் ஆகியோர் சேர்ந்து அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்துவைத்தனர். பின்னர், ஹேமலதாவின் தாய் மஞ்சுளாவிடம், அவரது மகளையும், மருமகனையும் கடத்திவைத்துள்ளதாகக் கூறி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதையடுத்து, காதல் ஜோடியை காரில் கடத்திக்கொண்டு நம்பியூர் பேருந்து நிலையப் பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது, காரில் இருந்து பாலாஜியும், ஹேமலதாவும் கீழே இறங்கி தப்பிச் சென்று, பெருந்துறை காவல் நிலையத்தில் கடந்த 28.4.2013இல் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து, அமுதரசு, யுவராஜ், சரவணன் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு பெருந்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பெண் சம்மந்தப்பட்ட வழக்கு என்பதால் பெருந்துறை நீதிமன்றத்தில் இருந்து இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் யுவராஜ், இந்த வழக்கு விசாரணைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கெனவே ஜாமீனில் வெளியே வந்த அமுதரசு, சரவணன் ஆகியோரும் நீதிமன்றத்தில்ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு, இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட இந்த மூவரும் மீண்டும் நவம்பர் 20ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து யுவராஜை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.