
ஈரோடு மாநகராட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தினார்.
ஈரோடு அரசு விருந்தினர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் சமூக ஆர்வலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அளித்த மனுவில் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் கடந்த 2009 இல் ரூ. 209 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. பிரதான சாலை, தெரு, விரிவாக்கப் பகுதி என 506 கிலோ மீட்டர் தூரத்துக்கான இப்பணி ஒன்பது ஆண்டாக பல்வேறு காரணத்தால் இழுபறியாக உள்ளது. போதிய அளவு நிதி ஒதுக்கீடு இன்றி பல சாலை, பிரதான தெருக்களில் தோண்டிய குழிகள் மூடப்படாமல், தார் சாலை அமைக்காமல், கழிவு நீர் வடிகால் அமைக்காமல், வளர்ச்சிப் பணிகள் செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
கடந்த 9 ஆண்டில் சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் மட்டும் 60 சதவீத பணிகளும், பிற பகுதியில் 40 சதவீதப் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. குறிப்பாக, மாநகரப் பகுதியின் கழிவுநீரைச் சுத்திகரிக்க 4 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்தனர். அங்கு கழிவு நீரை சுத்திகரித்து, பிற பயன்பாட்டுக்கு வழங்கவும், பயோ காஸ், இயற்கை உரம் தயாரிக்கவும் திட்டமிட்டனர். அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர், முக்கியப் பிரமுகர் எதிர்ப்பால் அப்பணிகள் தொடங்கப்படவில்லை.
இப்பிரச்னையால், இப்பணியை எடுத்த பல ஒப்பந்ததாரர்கள் பணியை செய்ய முடியாமல் சென்றுவிட்டனர். இப்பணியை விரைவாக முடிக்கத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத் திட்டம் மூலம் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுருந்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆளுநர் அது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி பணிகளை விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தினார்.
இதேபோல, அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மனுக்கள் ஆளுநரிடம் அளிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






